சர்வதேச நாணய நிதியத்துடன் இணையவழியில் பகிரங்க கலந்துரையாடலுக்கு வருமாறு சஜித் பிரேமதாஸ, அநுரகுமார திஸநாயக்க ஆகியோருக்கு சவால் விடுகிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
மக்களுக்கு பொய் சொல்வதை நிறுத்திவிட்டு, சர்வதேச நாணய நிதியத்துடன் இணையவழி முறையில் பகிரங்க கலந்துரையாடலுக்கு வருமாறு சஜித் பிரேமதாஸ, அநுரகுமார திஸநாயக்க ஆகியோருக்கு சவால் விடுகிறேன் - என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐ.தே.கவின் விசேட சம்மேளன கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், நாடு வீழ்ச்சியடைந்திருந்த போது யாரும் முன்வராததாலேயே நான் முன்வந்தேன். இலங்கை இல்லாமல் போனால் ஐக்கிய தேசிய கட்சியும் இல்லாமல் போகிறது. ஐக்கிய தேசிய கட்சியை நிர்மாணித்த டி. எஸ். சேனாநாயக்க எமக்குக் கற்றுத்தந்த விடயங்களின் அடிப்படையிலேயே நான் நாடு இல்லாமல் போகும் நிலையில் நாட்டை பாதுகாத்து கட்சியைப் பாதுகாக்க முன்வந்தேன். இந்த விடயங்கள் எம்மில் இருந்து சென்றவர்களுக்கு தெரியாது. அவர்களுக்கு கட்சியின் வரலாறு தெரியாது.
எதிர்வரும் தேர்தல் தீர்மானமிக்க தேர்தலாகும். இதில், நான் வெற்றிபெற வேண்டுமா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். நான் வெற்றிபெற வேண்டும் என்றால் வீடுவீடாக சென்று மக்களுக்கு உண்மை நிலையை தெளிவுபடுத்த ஆரம்பிக்க வேண்டும். அன்று நாடு வீழ்ச்சியடையும் போது பலரும் எம்முடன் இணைந்து கொண்டு நாட்டை கட்டியெழுப்ப முன்வந்தனர். ஆனால், ஐக்கிய மக்கள் சக்தியும் மக்கள் விடுதலை முன்னணியும் நாட்டுக்கு அநீதி செய்தன. அவர்கள் அதிகாரத்தை பெற்றுக்கொள்ளவே முயற்சித்தனர்.
ரணசிங்க பிரேமதாஸவுக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவந்த போதும் நானே அவரைப் பாதுகாத் தேன். அதேபோன்று அவர் கொலை செய்யப்பட்டபோதும் நானே அந்த இடத்துக்கு முதலில் சென்றேன். இதனை அவர்கள் மறந்துள்ளார்கள். அவர்கள் ஓடியதாலேயே நான் பொறுப்பேற்றேன். நாங்கள் ஓர் அணியாக செயல்பட்டு நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்தது. இந்த அணியே உலக நாடுகளுடனும் சர்வதேச நாணய நிதியத்துடனும் கலந்துரையாடி உதவிகளை பெற்றுக்கொண்டு இந்த நிலைக்கு நாட்டை கொண்டு வந்தோம்.
அதிகாரத்துக்கு வந்தால் வரியை குறைப்பதாக சஜித் பிரேமதாஸவும் அநுரகுமாரவும் கூறுகின்றனர். அவர்கள் இதனை எவ்வாறு செய்யப்போகிறார்கள் என்பதை முதலில் தெரிவிக்க வேண்டும். வரியை குறைத்ததாலேயே நாடு வீழ்ச்சியடைந்தது என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது.
இரவில் விழுந்த குழியில் பகலில் விழவேண்டுமா? நாணய நிதியத்துடன் செய்துள்ள ஒப்பந்தத்தை திருத்துவதாக தெரிவிக்கின்றனர். இரண்டு தரப்பினருடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தை இலகுவில் மாற்ற முடியாது. அவ்வாறு செய்வதாக இருந்தால், 18 நாடுகளுடன் 3 அமைப்புகளுடன் கலந்துரையாட வேண்டும். நாணய நிதியத்தின் உத வியை பெற்றுக்கொள்ள எங்களுக்கு ஒரு வருடகாலம் சென்றது.
மேலும் நாணய நிதியத்தின் அதி காரிகள் அடுத்த வருடம் ஆரம்பத்தில் இலங்கை வர இருக்கின்றனர். எமது முன்னேற்ற நடவடிக்கை தொடர்பில் இதன்போது அவர்கள் ஆராய்வார்கள். நாங்கள் இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றால் தொடர்ந்து நாணய நிதியத்தின் நிபந்தனைகளுடன் முன்னுக்கு செல்லத் தயார்.
ஆனால், சஜித், அநுர என்ன சொல் லப்போகிறார்கள். நிபந்தனைகளை திருத்தியமைப்பதாக இருந்தால் ஒரு மாத காலம் செல்லும் தற்போது நாணய நிதியம் எமக்கு வழங்கி இருக்கும் நிதி ஜனவரி வரைக்கும் போதும் அதன் பின்னர் நிபந்தனைகளை மாற்றியமைக் கும்வரை நாணய நிதியத்தின் 700 பில்லியன் டொலர் நிறுத்தப்படும். அப்படியானால் நாட்டை கொண்டு செல்ல இவர்கள் பணம் எவ்வாறு பெறுவார்கள்?
அவர்கள் நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மாற்றியமைப்பதாக தெரிவிப்பது மக்களை ஏமாற்றும் செயலாகும். இனியும் மக்களுக்கு பொய் சொல்வதை நிறுத்திவிட்டு, சர்வதேச நாணய நிதியத்துடன் இணையவழி முறையில் பகிரங்க கலந்துரையாடல் ஒன்றுக்கு வருமாறு சஜித் பிரேமதாஸ், அநுரகுமார திஸநாயக்க ஆகியோருக்கு சவால் விடுகிறேன். இதன் மூலம் அவர்கள் மேடைகளில் சொல்லும் விடயங்களின் உண்மைத் தன்மைமையை முழு நாட்டு மக்களும் கண்டுகொள்ள முடியும் - என்றார்.