ஆள் கடத்தலை ஒழிப்பதற்கான குறைந்தபட்ச தராதரங்களை இலங்கை பூர்த்தி செய்யவில்லை - அமெரிக்கா இலங்கையை கண்டித்துள்ளது

6 months ago

ஆள் கடத்தலை ஒழிப்பதற்கான குறைந்தபட்ச தராதரங்களை இலங்கை பூர்த்தி செய்யவில்லை என்று கண்டித்துள்ள அமெரிக்கா எனினும், இலங்கை இதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஆள்கடத்தல் தொடர்பான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் 2024-ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையிலேயே அமெரிக்கா இதனைத் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில், கடந்த வருடத்தைவிட ஆள்கடத்தலை கட்டுப்படுத்தவதற்கான நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம் முன்னேற்றத்தை காண்பித்துள்ளது.

ஆள்கடத்தல்களில் ஈடுபடுபவர்களுக்கான தண்டனைகளை அதிகரிப்பது பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு சேவைகளை வழங்குவது போன்ற நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

கடத்தல்களை ஊக்குவிப்பதாகக் கூறப்படும் தனியார் முகவர் நிலையங்களை இலங்கை அரசாங்கம் உரிமங்களை இரத்து செய்து தடை செய்தது.

வெளிநாடுகளில் அடைக்கலம் புகுந்துள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அதிகாரிகள் உதவிகளை வழங்குகின்றனர்.

எனினும், இது தொடர்பான பல விடயங்களில் அரசாங்கம் ஆகக்குறைந்த தராதரத்தை பூர்த்தி செய்யவில்லை.

ஆள்கடத்தல் தொடர்பிலான குறைந்தளவு சம்பவங்கள் குறித்தே அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு வழக்கு தாக்கல் செய்துள்ளது.

கடத்தல்காரர்களுக்கான தண்டனைகள் கடுமையாக காணப்படவில்லை. இது கடத்தல்காரர்களை பொறுப்பு கூறவைப்பதற்கான முயற்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு குறித்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடத்தலுக்கு உடந்தையாக உள்ள அதிகாரிகளை பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்துவது குறித்து இலங்கை அரசாங்கம் அக்கறையை வெளிப்படுத்தவில்லை அல்லது பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

சிறுவர்களை பாலியல் நோக்கத்துக்காக கடத்திய சந்தேகநபர்களைக்கூட பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த முடியாத, விரும்பாத நிலையில் அரசாங்கம் காணப்படுகின்றது.

வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடத்தல் தொடர்பான பல வழக்குகள் உள்ளபோதிலும் இந்த வழக்குகளில் வெளிநாட்டு சட்ட அமுலாக்கல் அதிகாரிகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பை வழங்க வில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

அண்மைய பதிவுகள்