இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிணை முறி மோசடியில் நீதிமன்றம் அழைக்க நடவடிக்கை
மத்திய வங்கி பிணைமுறி மோசடி விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நீதிமன்றத்துக்கு கொண்டு வர தேவையான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் (08) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
நிச்சயமாக நாம் நாட்டின் ஊழல் மோசடிகளை நிறுத்த நடவடிக்கை எடுப்போம்.அந்த விடயத்தில் எந்த மாற்றமும் இல்லை.நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். அதில் எந்த மாற்றமும் இல்லை.
ஆனால், அதற்காக எவரையும் பழிவாங்கலுக்கு உட்படுத்தப் போவதும் இல்லை.
தோல்வி அடைந்த அரசியல்வாதிகளை பழிவாங்குதல் மற்றும் அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது செய்த செயல்பாடுகளுக்காக பழிவாங்குதல் போன்ற விடயங்களை நாம் மேற்கொள்ளப் போவதில்லை.
உறுதியான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களுடன் இந்த நாட்டின் சட்டத்திற்கு அமைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி விடயத்திலும் அத்தகைய நடவடிக்கையே மேற்கொள்ளப்படும்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி 2015 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த சயமத்திலேயே மத்திய வங்கி பிணை முறி மோசடி இடம்பெற்றது.
அந்த தருணத்தில் மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜூன் மகேந்திரன் இருந்தார்.
ஆகவே அவரிடம் பிணை முறி மோசடி குறித்த விசாரணையின் போது அர்ஜூன் மகேந்திரன் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு அமையவே இந்த விடயத்தை மேற்கொண்டதாக கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டமையினால் கோப் குழுவும் இரத்தாகியது.
அதனை நாட்டு மக்கள் நன்கு அறிவர்.
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு அமைக்கப்பட்டது. அதன் ஊடாக வழக்கு தொடரப்பட்டது.
அதற்கமைய முன்னர் அவர் ஜனாதிபதியாக இருந்தமையினால் விடுபாட்டுரிமை இருந்தது. ஆனால் அந்த விடுபாட்டு உரிமை தற்போது இல்லை.
ஆகவே ரணில் விக்கிரமசிங்கவை தற்போது எம்மால் நீதிமன்றத்திற்கு அழைக்க முடியும். அதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அப்போதைய அமைச்சர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோர் அந்த வழக்கு விசாரணைகளின் போது அவசியம் வருகை தர வேண்டும் அவ்வாறு அவர்கள் இன்றி விசாரணை மேற்கொண்டால் நியாயத்தை பெற்றுக் கொள்ள முடியாது.
நாம் ஊழல்வாதிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது மாத்திரமல்லாது மீண்டும் அத்தகைய மோசடிகள் இடம் பெறாதிருப்பதை உறுதிப்படுத்த வேண்டியதும் அவசியமாகவுள்ளது-என்றார்.