அச்சமில்லாமல் இலங்கைக்கு வருகை தருமாறு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அழைப்பு விடுக்கின்றோம் என்றும் பாதுகாப்பு நட வடிக்கைகளை வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு எடுத்துரைத்துள்ளோம் என்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீதான தாக்குதல் விவகாரம் குறித்து சந்தேகத்தின் அடிப்படையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர்
சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
"சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை பலப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மக்கள் மீது தாக்குதல் இடம்பெறும் என்று தகவல்கள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.
எனவே, பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.
இதேவேளை, சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் இடம்பெறலாம் என்று இந்திய புலனாய்வுப் பிரிவு ஊடாக தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெற வில்லை.
இன்னும் சில நாட்களில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த அச்ச நிலைமையை தணிக்க முடியும்.
அப்போது அமெரிக்கா மற்றும் பல நாடுகள் விடுத்துள்ள எச்சரிக்கை செய்தியை நீக்கலாம்.
நாங்கள் எடுத்த நடவடிக்கைகளில் அவர்கள் ஏற்கனவே திருப்தியடைந்துள்ளனர்.
எனவே, அவர்கள் தங்கள் குடிமக்களை நம் நாட்டுக்கு சுற்றுலாவுக்கு அனுப்ப நம்பிக்கையுடன் உள்ளனர்.
சுற்றுலா பயணிகளின் வருகையும் நிறுத்தப்படவில்லை.
22ஆம் திகதியும் இஸ்ரேலியர்கள் இலங்கைக்கு வந்திருந்தனர். அப்படி ஒரு பிரச்னையும் இல்லை.
இங்கு இருப்பவர்கள் தங்கள் சுற்றுலாவை சுதந்திரமாக செய்கிறார்கள்.
அவர்களுக்கு எந்தத் தடையும் இல்லை.
தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்.
எனவே, பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை.
இதுபோன்ற சூழ்நிலையில், தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது.
குறிப்பாக சுற்றுலாத்துறையை நடத்தும் நிறுவனங்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம்,
ஒவ்வொரு ஹோட்டலிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பயன்படுத்தவும் மற்றும் சோதனை செய்யவும்.
மேலும், பொது மக்கள் ஏதேனும் தகவல் அறிந்தால், அவசர அழைப்புகளை மேற்கொள்ளும் வகையில், தொலைபேசி எண்ணையும் வழங்கியுள்ளோம்.
எனவே, இந்தச் சூழலை தேவையற்ற அச்சுறுத்தல்களுக்கும், அரசியல் ஆதாயங்களுக்காகவும் பயன்படுத்த முயற்சிக்காதீர்கள்.
பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில், சாத்தியமான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்துள்ளோம்”, என்றார்.