மருத்துவர் ஜெயகுலராஜா, உடல்நலக் குறைவு காரணமாக முல்லைத்தீவு மாஞ்சோலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அவரின் நல்லடக்கம் புனித மத்தியா ஆலய சேமக்காலையில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 4 மணிக்கு நடைபெற உள்ளது.
மருத்துவர், தமிழர் விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலில் காயமடைந்த சீலன், குமரப்பா, புலேந்திரன் போன்றவர்களுக்கு சிகிச்சையளித்தமைக்காக 1983 இல் கைது செய்யப்பட்டு, வெலிக்கடைச்சிறையில் குட்டிமணி, தங்கத்துரை, வண. பிதா சிங்கராசா மற்றும் விரிவுரையாளர் நித்தியானந்தன் போன்றவர்களுடன் இருந்தவர்.
பின்னர் மட்டக்களப்பு சிறையுடைப்பில் தப்பி இந்தியா சென்றிருந்தார்.
அதன் பின்னர் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தலைமைப் பொறுப்பை வகித்தவர்.
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம், அடேல் பாலசிங்கம், யோகி போன்றவர்களுடன் உடனிருந்து பணியாற்றியவர்.
மருத்துவர் ஜெயகுலராஜா விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவுக்கு ஆரம்ப காலங்களில் பயிற்சியளித்ததோடு, முல்லைத்தீவு மாவட்ட மருத்துவப் பொறுப்பதிகாரியாகவும் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.