அமெரிக்கா வங்காள விரிகுடாவில் உள்ள மார்ட்டின் தீவை கைப்பற்றி குத்தகைக்கு விட முயற்சி- அரசியல் தரப்புகள் குற்றச்சாட்டு.
அமெரிக்கா நாடானது வங்காள விரிகுடாவில் உள்ள மார்ட்டின் தீவை கைப்பற்றி குத்தகைக்கு விட முயற்சித்து வருவதாகவும், பங்களாதேஷில் ஒரு விமானப்படை தளத்தை நிறுவுவதற்கு திட்டமிடுவதாகவும் அந்நாட்டு அரசியல் தரப்புக்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷில் ஒரு விமானப்படை தளத்தை நிறுவுவதற்கு மேலைத்தேய நாடு மேற்கொண்ட முயற்சியை நிராகரித்ததாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கூறிய கருத்தை மேற்கோள் காட்டியே இந்த செய்தி வெளியாகியுள்ளது.
பங்களாதேஷ் மற்றும் மியான்மரில் மேலைத்தேய அரசை உருவாக்குவதற்கான சதிகள் நடந்து வருவதாகவும் ஷேக் ஹசீனா கடந்த காலங்களில் கூறியுள்ளார்.
பங்களாதேஷின் இடைக்கால அரசானது மக்களுக்கு ஜனநாயகமான எதிர்காலத்தை உறுதி செய்ய வேண்டும் என அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் வலியுறுத்தியிருந்தார்.
இதனை மையப்படுத்தியே, பங்களாதேஷ் அரசாங்கத்தின் சில தரப்புக்களால் இந்த குற்றசாட்டுக்கள் வலுக்க தொடங்கியுள்ளன.
இந்நிலையில் அமெரிக்கா, மற்றும் பங்களாதேஷிற்கு இடையிலான கருத்து வேறுபாடும், சீனாவின் ஆதிக்க நிலையும், அந்நாட்டில் இடம்பெற்ற கலவரம், மற்றும் அரசியல் மாற்றத்திற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.
இதன்படி , கடந்த தசாப்தத்தில், தெற்காசியாவில் சீனாவின் செல்வாக்கு ''பெல்ட்'' மற்றும் ''ரோட்" முன்முயற்சியின் மூலம் வளர்ந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.
இதில் தெற்காசிய நாடுகளான இலங்கை மற்றும் மாலைதீவுகள் உள்வாங்கப்பட்டுள்ளன.
உள்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் கலாச்சாரப் பரிமாற்றங்கள் சீனாவின் நலன்களை மேம்படுத்தி, மக்களின் பார்வையை மாற்றியுள்ளன.
இதற்கமைய இந்தியாவின் சக்தி மற்றும் அண்டை நாடுகளுடனான உறவுகளில் சீனாவின் ஆதிக்கம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்தியாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு சவாலாக மாறியுள்ளது.
மேலும், அமெரிக்காவை பொருளாதார ரீதியில் எதிர்க்க தயாராகியுள்ள சீனா, இந்த நாடுகளின் எதிர்கால திசையை வடிவமைப்பதில் ஒரு பங்கை வகிக்கத் தொடங்கியது.
இதுவே பங்களாதேஷின் அரசியல் நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.
இவ்வாறான விடயங்களை மையப்படுத்தியே அமெரிக்கா மீதான குற்றச்சாட்டை பங்களாதேஷ் சுமத்தியுள்ளது.