யாழ்.தையிட்டி விகாரை அமைந்த காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் இன்றும் நாளையும் போராட்டம்

2 months ago



யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள மற்றும் அதனைச் சூழவுள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை, நாளை புதன்கிழமை ஆகிய இரு நாட்களிலும் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

தையிட்டி பகுதியில் உள்ள சுமார் 07 ஏக்கர் காணியை அடாத்தாக கையகப்படுத்தி, எவ்வித அனுமதிகளும் இன்றி சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரை எனும் விகாரை கட்டப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் இருந்த மக்கள் யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு கால பகுதியில் அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.

பின்னர் அப்பகுதியை உயர்பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினர் பிரகடனப்படுத்தியிருந்தனர்.

பின்னர் யுத்தம் நிறைவடைந்த நிலையில் மக்கள் மீள்குடியேற, இராணுவத்தினர் கட்டம் கட்டமாக அனுமதித்தனர்.

அவ்வேளை தற்போது விகாரை அமைந்துள்ள மற்றும் அதனை சூழவுள்ள சுமார் 14 ஏக்கர் காணியில் மக்கள் மீள்குடியேற இதுவரை அனுமதிக்கப்படவில்லை.

குறித்த பகுதியில் எவ்வித அனுமதிகளும் இன்றி, யாழ். மாவட்ட மற்றும் தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் விகாரையின் கட்டுமானப் பணிகளை நிறுத்தி அப்பகுதிகளை மக்களிடம் மீள ஒப்படைக்குமாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போதிலும், காணிகள் மீளக் கையளிக்கப்படாது, இராணுவத்தினரின் உதவியுடன் விகாரை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

குறித்த விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளான 14 ஏக்கர் காணியையும் காணி உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்க வேண்டும் என காணி உரிமையாளர்கள் சுமார் ஒரு வருட காலத்துக்கு மேலாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை, நாளை புதன்கிழமை ஆகிய இரு நாட்களும் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்து போராடத்தில் ஈடுபட வேண்டும் எவும் காணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காணி உரிமையாளர்களின் கோரிக்கையை அடுத்து, பல்வேறு தரப்பினரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.



அண்மைய பதிவுகள்