யாழ். நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலயத்தில் சிறிலங்கா வான்படையால் மேற்கொள்ளபட்ட வான்படை தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளின் 29 ஆவது ஆண்டில் நினைவு நாளில் நினைவு கூர்ந்தனர்.
யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியை சேர்ந்தவருமான ஈ.சரவணபவன் தலைமையில் நினைவு கூருதல் நிகழ்வு இடம்பெற்றது.
கடந்த 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 திகதியன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும், நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப்படையினரின் மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசியதில் 147 பேர் பலியாகினர்.
அன்று அதிகாலை வலிகாமம் பிரதேசங்களை நோக்கி எறிகணை தாக்குதல்,விமான தாக்குதல்களின் உதவியுடன் இராணுவத்தினர் முன்னேறிப்பாய்தல் எனும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர்.
தொடர் எறிகணை தாக்குதல்களால் தமது வாழ்விடங்களை விட்டு நவாலியை நோக்கி இடம்பெயர்ந்த மக்கள் நவாலி சென்ற பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் தஞ்சமடைந்தனர்.
அன்று மாலை திடீரென வந்த மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை மக்கள் தஞ்சமடைந்திருந்த தேவாலயம் மற்றும் ஆலயம் மீது வீசின.இக் குண்டு வீச்சு தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் உட்பட 147 பேர் அந்த இடத்திலேயே உடல் சிதறி பலியாகியிருந்தனர். 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.