தேர்தல் காலத்தில் நாம் வழங்கிய வாக்குறுதிக்கமைய புதிய அரசமைப்பை உருவாக்குவோம் -- அமைச்சர் நளிந்த ஜய திஸ்ஸ தெரிவிப்பு

1 month ago



தேர்தல் காலத்தில் நாம் வழங்கிய வாக்குறுதிக்கமைய புதிய அரசமைப்பை உருவாக்குவோம் என்று ஆளும் தரப்பின் பிரதம கொறடாவும் சுகாதார அமைச்சருமான நளிந்த ஜய திஸ்ஸ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் 6ஆம்நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

"பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில்தான் ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளார்.

இந்த வரவு -செலவுத் திட்டம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடையது, சர்வதேச நாணய நிதியத்தினுடையது என்று எதிர்க் கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றார்கள்.

அத்துடன் வரவு-செலவுத் திட்டத்துக்குப் பல பெயர்களையும் சூட்டுகின்றார்கள்.

மக்களுக்குப் பயனுடையதாக அமைந்தால் வேண்டிய பெயரை எதிர்க்கட்சிகள் பாதீட்டுக்குச் சூட்டிக்கொள்ளட்டும்.

நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வரவு - செலவுத் திட்டத்தில் அனைத்து மக்களும் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.

பொருளாதாரத்துக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் நிவாரண வழங்கலுக்கான முன்மொழிவுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

எந்தத் தரப்பினரும் புறக்கணிக்கப்படவில்லை.

வரவு-செலவுத் திட்டத்தில் புதிய அரசமைப்பு தொடர்பில் குறிப்பிடப்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம்.

புதிய அரசமைப்பு ஒன்று உருவாக்கப்படும் வரை அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் எவ்வித மாற்றமும் இல்லாத வகையில் செயற்படுத்தப்படும். சிறந்த வாய்ப்பு கிடைக்கப் பெறும் முதல் சந்தர்ப்பத்தில் பொதுமக்களின் அபிப்பிராயங்களுக்கும். நாடாளுமன்ற ஆலோசனைக்கும் போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டு புதிய அரசமைப்பை உருவாக்குவோம்.

அதற்குத் தயாராகவே உள்ளோம்.

புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு முன்னர் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அப்போதுதான் புதிய அரசமைப்பைச் சிறந்த முறையில் இயற்ற முடியும். ஆகவே, தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிக்கமைய புதிய அரசமைப்பை உருவாக்குவோம்.

அரச சேவையாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறைக்கு அதிக நிதி இம்முறை ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த அரச சேவையாளர்களின் சம்பளம் 80 சதவீதத்தால் வளர்ச்சி பெறும். வரவு- செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகள் செயற்படுத்தப்படும் என்ற அச்சத்தில் தான் எதிர்க்கட்சிகள் போலியான குற்றச்சாட்டுக்களை முன் வைக்கின்றன."- என்றார்.

அண்மைய பதிவுகள்