ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட இலங்கையர்களை மீட்க ஒத்துழைப்பு வழங்கத் தயார். தாய்லாந்து தெரிவிப்பு

2 hours ago



ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டு, இன்னமும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கையர்களை மீட்பதற்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாக தாய்லாந்து பிரதமர் அலுவலக விவகார பிரதி அமைச்சர் ஜெனரல் நிப்பற் தொங்லெக் உறுதியளித்துள்ளார்.

தாய்லாந்துக்கான இலங்கையின் தூதுவரும், நிரந்தர வதிவிடப் பிரதிநிதியுமான விஜயந்தி எதிரிசிங்க மற்றும் தாய்லாந்து பிரதமர் அலுவலக விவகார பிரதி அமைச்சர் ஜெனரல் நிப்பற் தொங்லெக் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு அண்மையில் பாங்கொக் நகரில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் தாய்லாந்தின் தேசிய புலனாய்வுப்பிரிவு மற்றும் தேசிய பாதுகாப்புப் பேரவை ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

இச்சந்திப்பின்போது இலங்கைக்கும், தாய்லாந்துக்கும் இடையில் ஆட்கடத்தலை முறியடிப்பதற்கான கூட்டிணைந்த நடவடிக்கைகள் உள்ளடங்கலாக இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புக்களை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பில் விசேடமாகக் கலந்துரையாடப்பட்டது.

அதேவேளை ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களை மீட்பதற்கு தொடர்ச்சியான மிகவலுவான ஒத்துழைப்புக்களை வழங்கியமைக்காக குறிப்பாக சமூகப் பாதுகாப்பு மற்றும் மக்கள் பாதுகாப்பு அமைச்சு, குடிவரவுப் பணியகம், எல்லைப் பாதுகாப்புப்படை என்பன உள்ளடங்கலாக தாய்லாந்து அரசாங்கத்துக்கு இலங்கைத் தூதுவர் விஜயந்தி எதிரிசிங்க தமது நன்றியை வெளிப்படுத்தினார்.

அத்தோடு தற்போது ஆட்கடத்தல் என்பது பிராந்திய ரீதியில் மிகமுக்கிய பிரச்சினையாக மாறியிருப்பதாகவும், அது தாய்லாந்தின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் சுட்டிக்காட்டிய அவர், எனவே இப்பிரச்சினைக்கு வெகுவிரைவில் தீர்வுகாண வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

அதனை ஏற்றுக்கொண்ட அந்நாட்டு பிரதி அமைச்சர் நிப்பற் தொங்லெக், ஆட்கடத்தல்களால் தமது நாட்டைச் சேர்ந்த பிரஜைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியதுடன், அதன் விளைவாக தமது நாட்டுப் பொருளாதாரத்துக்குப் பாரிய இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் கவலை வெளியிட்டார்.

அதுமாத்திரமன்றி ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டு, இன்னமும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கையர்களை மீட்பதற்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.

அண்மைய பதிவுகள்