கடந்த காலங்களில் அமைச்சர்கள் அதிகமாக இருந்தும், சில துறைகளில் முன்னேற்றமில்லை.-- மல்வத்தை பீடத்தின் பீடாதிபதி கவலை
கடந்த காலங்களில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்த போதிலும், சில துறைகளில் முன்னேற்றம் காணப்படவில்லை என மல்வத்தை பீடத்தின் பிரதான பீடாதிபதி திப்பட்டுவாவே சிறீ சித்தார்த்த சுமங்கல மகாநாயக்க தேரர் கவலை தெரிவித்துள்ளார்.
புத்தசாசன அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்னவை நேரில் சந்தித்துப் பேசும் போதே பிரதம தேரர் மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதற்கான புதிய அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு பாராட்டு தெரிவித்த அவர், எல்லா வகையிலும் இது ஒரு நல்ல நடவடிக்கை என்று குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
புதிய அரசாங்கம் அதிக எண்ணிக்கையில் அமைச்சர்களை நியமிக்கமாட்டோம் என்று அறிவித்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.
வெறும் மூன்று அமைச்சர்களுடன் இந்த அரசு செயல்பட்டு வருவது பாராட்டத்தக்கது.
கடந்த காலங்களில் நூற்றுக்கணக்கான அமைச்சர்கள் பதவி வகித்த போதிலும், சில பகுதிகளில் பணிகள் நடைபெறவில்லை.
பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை.
விகாரை தேவலகம் கட்டளைச் சட்டத்தில் உள்ள பல சரத்துக்களுக்கு திருத்தங்கள் தேவை, அது எவ்வாறு சீரதிருத்தப்பட வேண்டும் என்பதற்கான எங்கள் முன் மொழிவுகளுடன் ஒரு ஆவணத்தை நாங்கள் தயாரித்துள்ளோம்.
இந்த அமைச்சினால் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம்.
இருப்பினும், மூன்று அமைச்சர்கள் மட்டுமே நாட்டை நிர்வகிப்பதால், எல்லாவற்றையும் நிவர்த்தி செய்வது கடினம்-என்றார்.
மகாநாயக்கர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆரியரத்ன- எதிர்வரும் அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் போது அரசியலமைப்பின் ஒன்பதாவது உறுப்புரை நீக்கப்படும் என தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன.
ஜனாதிபதியோ அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சர்களோ அவ்வாறான கருத்தை வெளியிட வில்லை.
ஒன்பதாவது உறுப்புரையில், பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், மற்ற மதங்களை சமமாக நடத்த வேண்டும் என்று தெளிவாகக் கூறுகிறது.
எங்கள் அறிவைப் பொறுத்தவரை, இந்த சட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது, நாங்கள் எதையும் எதிர்பார்க்கமாட்டோம்.
எங்களுடன் பணிபுரியும் பௌத்தம் அல்லாத அறிஞர்களும் கூட இந்த சட்டத்தை திருத்தப்படக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.
ஒரு பௌத்தன் என்ற முறையில் நானும் அதே எதிர்பார்ப்புகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.
எவ்வாறாயினும், நான் அரசியலமைப்பை உருவாக்குபவர் அல்ல, அரசாங்க அதிகாரி, எனவே எதிர்வரும் அரசியலமைப்பு சீர் திருத்தங்களின் போது என்ன நடக்கும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்- என்றார்.