தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்குமாறு கோரி 29 ஆம் திகதி போராட்டம்.

3 months ago


தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கத் தவறிய, சமூக விரோதச் செயல் களை கட்டுப்படுத்தத் தவறிய தி. மு. க. அரசைக் கண்டித்து, அ. தி. மு. க. மகளிர் அணி மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் எதிர்வரும் 29ஆம் திகதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச் சாமி தெரிவித்துள்ளார்.

தி. மு. க. ஆட்சியில் கொலை காரர்களும், கொள்ளைக்காரர்க ளும், பாலியல் வன்கொடுமையாளர்களும் சுதந்திரமாக, சர்வ சாதாரணமாக குற்றம் புரிவது வாடிக்கையாக இருக்கிறது.

6 வயதுச் சிறுமி முதல் 60 வயதைக் கடந்த பெண்கள் வரை யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழ்நிலை தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்டுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது.

பொலிஸ் துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், பாலியல் குற்றங்களைத் தடுக்கவும், சட்டப் படி உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் பொலிஸாருக்கு முழு சுதந்திரத்தை இன்றுவரை வழங்கவில்லை.

மேலும், தி.மு.க. அரசின் முதலமைச்சருடைய செயலற்ற தன்மையால் ஒரு சில பொலிஸார் மக்களைப் பாதுகாப்பதற்கு பதிலாக, சமூக விரோதிகளுக்கு உடந்தையாக இருப்பதாக வரும் செய்திகள் வெட்கக் கேடான தாகும்.

தி. மு. க. ஆட்சியில் தமிழகம் போதைப் பொருள் கேந்திரமாக மாறியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.