தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் செல்வாக்கு இழந்த பாதையில் தொடர்கின்ற நிலையில் கட்சி முடிவு அமையக் கூடாது எம்.பி பொ.கஜேந்திரகுமார் தெரிவிப்பு

1 week ago



தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கை இழந்த பாதையை தொடர்கின்ற வகையில் கட்சியின் முடிவுகள், பதவிகள் அமையக்கூடாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சி பிரதான கட்சியாக உள்ளமையினால் அந்தக் கட்சியைத் தவிர்த்து தமிழினம் முன்செல்ல முடியாது என்றும் அவர் கூறினார்.

கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பைச் சரியாக புரிந்து கொண்டு, மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு சிலரின் ஆதிக்கத்தை கட்சி தொடர்ந்தும் அனுமதிப்பதன் ஊடாக தொடர்ந்தும் ஒரு மோசமான கொள்கை ரீதியான பாதையில் தமிழ்த் தேசிய அரசியலைத் தள்ளும் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டார்

கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு சமகால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையில் அவர் இதனை கூறினார்.

ஒரு பொதுப்புள்ளியில் சந்திப்பதற்கு தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் சிறீதரனுடன் ஏற்கனவே பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்து உள்ளதாகவும் அதேபோல் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுடனும் பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்து உள்ளதாகவும் கஜேந்திரகுமார் கூறினார்.

இந்த பேச்சுவாரத்தைகளை அடுத்த ஆண்டில் முன்கொண்டு செல்ல எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சி சரியான மாற்றங்களை செய்யுமானால் தமிழினத்துக்கும் தமிழ்த் தேசிய அரசியலுக்கும் ஒரு சுபீட்சமாக அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறினார். 

அண்மைய பதிவுகள்