இலங்கை மீது போர்க் குற்றச்சாட்டு, அது சார்பான பிரச்சினை, உள்நாட்டுப் பொறிமுறை மூலம் அரசின் பொறுப்புக்கூறலை வெளிப்படுத்தும் அறிக்கை விரைவில்
இலங்கைக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுகள் மற்றும் அதுசார்பான பிரச்சினைகளில், உள்நாட்டுப் பொறிமுறைமூலம் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை வெளிப்படுத்தும் விதமாக சிறப்பு அறிக்கையொன்று விரைவில் வெளியிடப்படவுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது அமர்வு பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த அமர்வுக்கு முன்பாக மேற்படி சிறப்பு அறிக்கையை வெளியிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த அறிக்கையை உருவாக்குவதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தின் தலைமையில் சிறப்புக் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களை முற்றாக நிராகரிக்கும் வகையிலும், இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக வெளிப்புற சாட்சியங்களைத் திரட்டுவதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையிலும் இந்த சிறப்பு அறிக்கை அமையும்.
அதேநேரம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குப் பதில் வழங்கும் வகையில் அந்த அறிக்கை அமையாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை, ஜனாதிபதி அநுர தலைமையிலான அமைச்சரவை கடந்த ஒக்ரோபர் மாதம் 7ஆம் திகதி நிராகரித்திருந்தது.
இதன் தொடர்ச்சியாகவே, உள்நாட்டுப் பொறிமுறை மூலம் அரசாங்கத்தின்பொறுப்புக்கூறலை வெளிப்படுத்தும் விதமாக இந்த அறிக்கை வெளியிடப்படவுள்ளது.