மன்னாரில் மக்களின் விருப்பத்துக்கு மாறாக கனியமணல் அகழ்வதற்காக, இன்று மேற்கொள்ளவுள்ள களஆய்வினை நிறுத்தவும் -- எம்.பி து. ரவிகரன் கோரிக்கை

மன்னார்த் தீவில் மக்களின் விருப்பத்துக்கு மாறாக கனியமணல் அகழ்வதற்காக, 19 ஆம் திகதி இன்றைய தினம் மேற்கொள்ளப்படவுள்ள களஆய்வினை உடனடியாக நிறுத்த வேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்களின் விருப்பமின்றி இந்தக் களஆய்வு இடம்பெற்றால் மக்கள் போராட்டம் பெரிய அளவிம் முன்னெடுக்கக்கூடிய சூழ்நிலை நிலவுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், இதனால் ஆபத்தான நிலமைகள் தோன்றலாமெனவும், சட்ட ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்களும் ஏற்படுமெனவும் எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு - செலவுத்திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் -
மன்னார்த் தீவுப் பகுதியில் கனிய மணல் அகழ்வு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
மன்னார் தீவுப் பகுதி என்பது மிகவும் குறுகிய தாழ்வான நிலப்பகுதியாகும்.
கடல்நீர் மட்டத்திலிருந்து தாழ்வான நிலப்பகுதி என்பதால் மழைக் காலத்தில் நீர் வழிந்தோட முடியாமல் பொதுமக்கள் தொடர்ந்தும் இடம்பெயர வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் உள்ளனர்.
இயற்கை அனர்த்தத்தை தாங்குதிறன் கொண்டதாக தீவுப் பகுதியின் தரைத்தோற்ற அமைவிடமில்லை.
அதனால் தான் மன்னார் தீவில் மூன்று மாடிகளுக்குமேல் கட்டடங்களை அமைப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை அனுமதி வழங்குவதில்லை.
ஆகவே இப்பகுதியில் கனிய மணல் அகழ்வதென்பது மிகவும் பாரதூரமான விளைவுகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும்.
மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைமையின்கீழ் 23அரச திணைக்களங்கள் மன்னார் தீவுப் பகுதிக்குச் சென்று கள ஆய்வு மேற்கொண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டறிக்கை வழங்குவதற்குரிய ஏற்பாட்டிற்கு கடந்த இரண்டுமுறை சென்றபோதும் மக்களின் பாரிய எதிர்ப்புக் காரணமாக மேற்கொள்ள முடியாத நிலமை காணப்பட்டது.
இந்நிலையில் பெப்ரவரி 17 மன்னார் நீதிமன்றத்தில் போராட்டத்திற்கு எதிராக தடை உத்தரவு பெற்றுக்கொண்டு, பெப்ரவரி19 அப்பகுதியில் கள ஆய்வினை மேற்கொள்ள இருக்கின்றனர்.
இது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
அந்த மக்களுடைய விருப்பம் இல்லாமல் தனியார் காணிக்குள் அத்துமீறி உட்புகுந்து இந்த ஆய்வை மேற்கொண்டு, தனியார் நிறுவனங்களுக்கு கனியமணல் அகழ்விற்கு அனுமதி வழங்குவது என்பது அந்த மக்களுக்குச் செய்கின்ற மிகப்பெரிய துரோகமாகும்.
எந்தத் திட்டமாக இருந்தாலும் மக்களுடைய விருப்பமின்றி செயற்படுத்த முடியாது.
பாரிய அளவில் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கக் கூடிய சூழ்நிலை நிலவுவதால் ஆபத்தான நிலமைகள் தோன்றலாம்.
சட்ட ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது.
ஆகவே உடனடியாக இந்தக் கள ஆய்வை மத்திய சுற்றாடல் அதிகார சபையும், ஏனைய திணைக்களங்களும் நிறுத்த வேண்டுமென இந்த உயரிய சபையின் ஊடாக கோரிக்கை விடுக்கின்றேன் - என்றார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
