இலங்கையில் மனித உரிமை மீறலுக்கு உள்ளகப் பொறிமுறை ஊடாகவே நடவடிக்கை, அரசு உறுதி. --அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு
இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு எதிராக உள்ளகப் பொறிமுறை ஊடாகவே சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான விஜித ஹேரத் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடி வுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
'நாட்டில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக புதிய ஆட்சியின்கீழ் சாதகமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டு வருகின்றன.
தேர்தலுக்குப் பின்னர் எவ்வித தேர்தல் வன்முறைச் சம்பவங்களும் பதிவாகவில்லை.
தற்போதைய தேர்தல் காலப் பகுதியிலும் அதேபோன்றதொரு அமைதியான சூழ்நிலையை பாதுகாப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தேசியப் பொறிமுறை ஊடாக உரிய தலையீடுகள் மேற்கொள்ளப்படும்.
ஜெனிவாக் கூட்டத்தொடரிலும் இது தொடர்பில் எமது நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளோம்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எமது நாட்டு அரசமைப்பு. குற்றவியல் சட்டம் உட்பட ஏனைய சட்டங்களுக்கு அமைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அது மட்டுமல்ல எதிர்காலத்தில் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்குரிய நடவடிக்கையும் எடுக்கப்படும்.
இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது, சில வேளைகளில் சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் பொறிமுறைகளின் உதவிகளும் பெறப்படும்.
ஆயினும் தேசியப் பொறிமுறை ஊடாகவே இறுதி நடவடிக்கை இடம்பெ றும்'- என்றார்.