தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைத்து செல்வதற்கு நான் இப்போதும் தயார்.எம்.பி சிறீதரன் தெரிவிப்பு
தற்போது உடைந்துபோயுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீளுருவாக்கம் செய்து அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளையும் ஒன்றிணைத்து செல்வதற்கு நான் இப்போதும் தயார்.
கடந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகளும் அதனையே எமக்கு எடுத்துக் கூறுகின்றன.
இவ்வாறு தெரிவித்துள்ளார் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் யாழ். தேர்தல் மாவட்டத் தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்.
அவர் மேலும் தெரிவித்ததாவது
உடைந்து போயுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீளுருவாக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.
அதற்கு நான் இப்போதும் தயாராக இருக்கிறேன்.
தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைத்து ஓரணியாகப் பயணிப்பது எமக்குப் பெரும்பலம்.
அதற்கான முயற்சிகளை எதிர்காலத்தில் செய்யவுள்ளேன்.
மக்கள் இம்முறை எம்மீது கொண்ட ஒரு அதிருப்தியின் காரணமாகவே தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்திருக்கிறார்கள்.
அதற்கான பொறுப்பை நான் உட்பட அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மக்கள் எம்மீது அதிருப்தி ஏற்படுவதற்கான காரணங்களைக் கண்டறிந்து எதிர்காலத்தில் அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகளை எமது மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்பதை என்னால் ஏற்க முடியாது.
எமது மக்கள் அப்படியானவர்கள் அல்லர். எம்மீதான அதிருப்தியின் வெளிப்பாடே இது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி இம்முறை தனித்து தேர்தலில் போட்டியிட்டு அதிகளவாக 8 ஆசனங்களைக் கைப்பற்றி இருக்கிறது.
கிழக்கில் தமிழரசு அமோக வெற்றியீட்டிய அதேவேளை நாம் வடக்கில் படுதோல்வி கண்டுள்ளோம்.
இது எமக்கு நல்ல படிப்பினை.
எங்களுக்குள் மோதிக் கொண்டிருக்காமல் மக்களுக்கான அரசியலை நாம் முழுவீச்சுடன் செய்யவேண்டும் என்பதை இது உணர்த்தியிருக்கிறது.
எதிர்காலத்தில் அதனைச் செய்வோம்.
எமது கட்சியின் தேசிய பட்டியல் ஆசனதுக்காக மாவை சேனாதிராசா உட்பட பலரது பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
அது தொடர்பில் இன்று நடைபெறும் உயர்மட்டக் கூட்டத்தில் முடிவு எட்டப்படும்- என்றார்.