வடக்கு,கிழக்கை இந்தியாவின் ஆதிக்கத்தில் கொண்டு வரவும் தென்மாகாண பிரதேசங்களைச் சீன அரசுக்கு வழங்கவும் இணக்கம் தெரிவிப்பு

3 hours ago



அரசாங்கம், இந்தியா மற்றும் சீன அரசாங்கங்களுடன் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு பிரகடனம் மூலம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இந்தியாவின் ஆதிக்கத்துக்கு கீழ் கொண்டு வருவதற்கும் தென்மாகாணத்தின் கீழ் பிரதேசங்களைச் சீன அரசாங்கத்துக்கு வழங்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த இணக்கப்பாடுகள் மூலம் இலங்கை உலகளாவிய அரசியல் பொறிக்குள் சிக்கிக்கொண்டுள்ளது என முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸா நாயக்க இந்தியா மற்றும் சீன அரசாங்கங்களுடன் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு பிரகடனம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

சீன அரசாங்கத்தின் ஒரே மண்டலம் ஒரே பாதை வேலைத்திட்டத்துக்கு இலங்கை முழுமையாக ஆதரவளிப்பதாகவும் அந்த வேலைத் திட்டத்துக்குள் அடங்கிய பல வேலைத்திட்டங்களை இலங்கைக்குள் செயற்படுத்துவ தாகவும் ஜனாதிபதி தெரிவித்திருப்பது பாரிய விடயமாகும்.

ஏனெனில் ஜனாதிபதி அநுரகுமார இந்திய விஜயத்தின் பின்னர் வெளியிட்ட கூட்டுப் பிரகடனத்தில், இலங்கையின் பூமியை இந்தியாவுக்கு அச்சுறுத்தலாகும் வரை வேறு எந்த நாட்டுக்கும் பயன்படுத்த இடமளிப்பதில்லை என தெரிவித்திருந்தார்.

அதேநேரம் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டு அங்கும் பல்வேறு வாங்குறுதிகளை வழங்கியிருப்பதை பார்க்கும்போது, இலங்கைக்குள் பல்வேறு உலகளாவிய அரசியல் வேலைத்திட்டங்களுடன் இந்து சமுத்திரத்தில் செயற்பட்டுவரும் பல்வேறு அதிகாரம் படைத்தவர்களுக்கு, ஏகாதிபத்தியவாதிகளுக்கு அவர்களின் வேலைத் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாக இலங்கை வாக்குறுதி வழங்கி வருகிறது.

இது அரசியல் ரீதியில் மிகவும் எச்சரிக்கையான நடவடிக்கையாகும்.

இதன் மூலம் வலயத்தில் அதிகாரமுடையவர்கள் உலக அதிகாரம் படைத்தவர்களுக்கு ஏகாதிபத்தியவாதிகளுடன் ஏற்படுகின்ற சண்டையின் போது இலங்கை முழுமையாக ஈடுபட இடமிருக்கிறது.

யுத்தமொன்றுக்கு இலங்கை இலக்காக இடமிருக்கிறது.

கூட்டு பிரகடனம் இரண்டையும் மிகவும் ஆழமாக ஆராய்ந்து பார்க்கும்போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இந்தியாவின் ஆதிக்கத்துக்கு கீழ் கொண்டுவருவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று அம்பாந்தோட்டை மாவட்டம் உள்ளிட்ட தென்மாகாணத்தின் கீழ் பிரதேசங்களை சீன அரசாங்கத்துக்கு வழங்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது- என்றார்.



அண்மைய பதிவுகள்