மாணவி மீது பாலியல் தொந்தரவு கொடுத்த பிள்ளையானின் ஒருங்கிணைப்பாளர் தொடர்பில் சாணக்கியன் கேள்வி.

5 months ago


மட்டக்களப்பில் பாடசாலை மாணவியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் (பிள்ளையான் ) கட்சி ஒருங்கிணைப்பாளரான ஆசிரியர் ஒருவர் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்தவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (07.08.2024) புதன்கிழமை விசேட உரையை முன்வைத்தே இந்த விடயத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதான பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிக்கு அந்த பாடசாலையின் ஆசிரியரான கோபிநாத் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இந்த மாணவி ஜனாதிபதிக்கு இவ்விடயத்தை அறிவித்துள்ளார். இந்த நபரை உடனடியாக கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு கடந்த 12ஆம் திகதி ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இருப்பினும், இந்த ஆசிரியரை பொலிஸார் இன்றுவரை கைது செய்யவில்லை. தனது சட்டத்தரணி ஊடாக அவர் நீதிமன்றில் முன்னிலையாகுவார் என்று பொலிஸார் குறிப்பிடுகின்றனர். பொலிஸாரின் கடமை இதுவல்ல.

கோபிநாத் என்ற இந்த ஆசிரியர் தான் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் கட்சி ஒருங்கிணைப்பாளர் என்று பகிரங்கமாக கூறுகின்றார்.

இந்த மாணவியிடம் 'நான் குறிப்பிடுவதை போல் இருக்காவிடின் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்' என்று இந்த ஆசிரியர் மிரட்டியுள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிட்டும் பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்படவில்லை.

இது ஒரு தேசிய பாடசாலை. ஆகவே இந்த பிரச்சினைக்கு கல்வி அமைச்சரின் பதிலை எதிர்பார்த்துள்ளேன்” என்றார்.

இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, சாணக்கியனிடம் தான் தகவல்களை கேட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு ஊடாக தலையிட்டு, உடனடியாக இது தொடர்பில் சட்டத்தை செயற்படுத்துமாறு குறித்த சிரேஷ்ட பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தப்படும் எனவும் பதிலளித்துள்ளார். 

அண்மைய பதிவுகள்