பா.ஜ.க. ஆட்சி அமைக்க வாய்ப்பு

7 months ago

400 இற்கு மேற்பட்ட இலக்கு என்ற அறைகூவலுடன் தேர்தலை எதிர்கொண்ட பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி 290 இற்கு மேற்பட்ட இடங்களை வசப்படுத்துகிறது.

பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பெறாததால் தனது கூட்டணிக்கட்சிகளின் ஆதரவுடனேயே ஆட்சி அமைக்கும் நிலையே மோடிக்கு மக்கள் அளித்த தீர்ப்பு என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடந்த மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

மொத்தமுள்ள 543 தொகுதிகளில் ஏற்கனவே சூரத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ் தலால் வெற்றி பெற்ற நிலையில் எஞ்சிய 542 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இரவு 7 மணி நிலவரப்படி பா.ஜ.க. தனித்து 239 வசப்படுத்துகிறது.

கூட்டணிக்கட்சிகளுடன் சேர்த்து பா.ஜ.க. கூட்டணி 290 இடங்களில் வெற்றிமுகம் கண்டுள்ளது.

ஆட்சியமைக்க 272 இடங்களில் வெற்றி பெற்றால் போதும் என்ற நிலையில் பா.ஜ.க. கூட்டணி பெரும்பான்மை பலத்தைப் பெற்றுள்ளது.

இது ஒருபறம் இருக்க இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் 90 இடங்களை தனித்து வசப்படுத்துகிறது.

கூட்டணிக்கட்சிகளுடன் சேர்த்து 235 தொகுதிகளை எட்டுகிறது.

இந்தச் சூழலில் ஆட்சி அமைப்பது பற்றி இன்று பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முக்கிய ஆலோசனை நடத்துகிறது.

இதில் தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் கட்சி கலந்து கொள்கிறது. மக்களவைத் தேர்தலில் இந்தக் கட்சியின் என்.டி.ஏவில் அங்கம் வகித்தன.

இந்த இரு கட்சிகளின் தலைவர்களான சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ்குமாரும் இப்போது கிங் மேக்கர்களாக கவனம் ஈர்த்துள்ளனர்.

இந்த நிலையில், “பா.ஜ.க. கூட்டணிக்கு வரலாற்று வெற்றி அளித்த வாக்காளர்களுக்கு நன்றி, தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் மீதான நம்பிக்கைக்கு நன்றி" என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

235 தொகுதிகளை வசப்படுத்தி வலம் வரும் இண்டியா கூட்டணி இரு கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக ஊகங்கள் வெளியாகி உள்ளது .

இந்த நிலையில், டில்லியில் நேற்று மாலை காங்கிரஸ் தேசியத் தலைவர் கார்கே. முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, சோனியா, பிரியங்கா காந்தி ஆகியோர் சந்திப்பொன்றை மேற்கொண்டபோது, பேசிய ராகுல் காந்தி, "இண்டியா கூட்டணிக்கட்சிகள் நாளை கூடும். அப்போது, நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர விரும்புகிறோமா? அல்லது வேறு முயற்சியை விரும்புகிறோமா என்பதை கூட்டணிக்கட்சியினருடன் பேசி, அவர்களின் கருத்துகளுக்கு மதிப்பு அளித்து முடிவு செய்வோம்" என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தடம்பதிக்காத பா.ஜ.க., தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகள் கொண்ட இந்த மக்களவைத் தேர்தலில், தி.மு.க. தலைமையில் ஓர் அணி, அ.தி.மு.க. தலைமையில் ஓர் அணி, பா.ஜ.க. தலைமையில் ஓர் அணி, நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி என 4 முனைப் போட்டி உருவானது.

தி.மு.க. தலைமையிலான அணியில் தி.மு.க. 22 தொகுதிகளிலும், காங்கிரஸ் தமிழகத்தில் 9 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன.

.பி.ஐ. சி.பி.எம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை தலா 2 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு தொகுதியிலும், ம.தி.மு.க. ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன.

மக்கள் நீதி மய்யம் கட்சியானது தி.மு.க வுக்கு ஆதரவு அளித்தது. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளையும் தி.மு.க. வசப்படுத்துகிறது.

ஆரம்பத்தில் தருமபுரியில் பா.ம.க. வேட்பாளர் சவுமியா அன்புமணி முன்னிலை வகித்த நிலையில், மதியத்துக்கு மேல் போக்கு மாறியது.

அதுவும் கைநழுவிப் போனதால் தமிழகத்தில் பா.ஜ.க. தடம் பதிக்கவில்லை. ஆனால் கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா என பா.ஜ.க. தனது வெற்றியை கணிசமாகப் பதிவு செய்துள்ளது.

தமிழகத்தில் வெற்றியைப் பதிவு செய்யாவிட்டாலும் கூட வாக்கு சதவீதத்தில் முன்னேறியிருப்பது பா.ஜ.கவும் ஆறுதல்.

இவை தவிர மணிப்பூரில் காங்கிரஸ் வெற்றி. மகாராஷ்டிராவில் பா.ஜ.க. கூட்டணிக்கு அதிர்ச்சி. ஒடிசாவில் நவீன் பட்நாயக் கட்சிக்கு பின்னடைவு என பல்வேறு சுவாரஸ்யங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது 2024 தேர்தல் முடிவுகள்.

இந்நிலையில், தேசிய ஜனநாயக் கூட்டணி, இண்டியா கூட்டணி தனித்தனியாக இன்று ஆலோசனை நடத்துகின்றன. இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அண்மைய பதிவுகள்