யாழ்.காங்கேசன்துறை உள்ளிட்ட பல தமிழர் பகுதிகளை அடிப்படையாக கொண்டு கனேடிய முதலீட்டாளர்களுடன் இணைந்து அரச - தனியார் கூட்டு முயற்சியில் 4 கைத்தொழில் பேட்டைகளை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(31) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ''திருகோணமலை, காங்கேசன்துறை, பரந்தன், மாங்குளம் உள்ளிட்ட பிரதேசங்களை அடிப்படையாகக் கொண்டு கனேடிய முதலீட்டாளர்களுடன் இணைந்து அரச - தனியார் கூட்டு முயற்சியில் 4 கைத்தொழில் பேட்டைகளை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காங்கேசன்துறையில் சுதந்திர வர்த்தக வலயத்தை நிறுவுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் 35 முதலீட்டு வேலைத் திட்டங்களுக்காக 800 மில்லியன் டொலர் பெறுமதியான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இவ்வாண்டில் எமது இலக்கு ஒரு பில்லியன் டொலர் என்ற போதிலும், 2 பில்லியன் டொலர் வரை முதலீடுகளை ஈர்க்க முடியும் என்று எதிர்பார்க்கின்றோம்.
இதேவேளை நாடுகளுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களையும் அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதன் ஊடாக வரி அற்ற ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்.
ஏற்கனவே இது தொடர்பில் வழங்கியுள்ள கோட்டாவை அதிகரிக்குமாறு இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
இலங்கைக்கு இலாபம் கிடைக்கும் வகையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் முதலீடுகள் குறைவடையலாம். இது எந்தவொரு நாட்டிலும் தேர்தல் காலங்களில் வழமையாக இடம்பெறுவதாகும்.
எவ்வாறிருப்பினும் இந்த காலப்பகுதியில் முதலீட்டு சபையை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய பொருளாதார பரிவர்த்தனை சட்டத்துக்கமைய பொருளாதார ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படவுள்ளது. இதன் பணி பொருளாதாரம் குறித்த பிரசாரங்களை முன்னெடுப்பதாகும்.
இதற்கான செயற்திட்டங்கள் இலங்கையில் முதலீடு என்ற தொனிப்பொருளின் கீழ் அதன் முகவரகங்களால் முன்னெடுக்கப்படும்.''என குறிப்பிட்டுள்ளார்.