2024 ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின்போது இலங்கை விமானப்படையால் 56 மில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானம்

3 months ago



2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின்போது ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான ஆகாயவழிப் போக்குவரத்து சேவைகளை வழங்கியதன் மூலம் இலங்கை விமானப்படையால் 56 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

இலங்கை விமானப் படையிடமிருந்து தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கோரப்பட்ட தகவல்களுக்கு அமைவாக ஆங்கில ஊடக மொன்று இவ்விடயத்தை வெளிப்படுத்தியுள்ளது.

தேர்தல் பிரசாரங்கள் நிறைவடையும் வரையில் இலங்கை விமானப் படையினால் 34 நாள்கள் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான ஆகாய வழிப் போக்குவரத்துக்கான சேவைகள் வழங்கப்பட்டன.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 23 தடவைகள் போக்குவரத்துச் சேவையைப் பெற்றுக் கொண்டுள்ளதோடு அதற்காக 29.09 மில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவினால் 11 தடவைகள் சேவை பெறப்பட்டுள்ளதோடு அதற்காக 20.75 மில்லியன் ரூபா அறவிடப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ச இரண்டு தடவைகள் சேவையைப் பெற்றுள்ளதோடு 1.44 மில்லியன் ரூபா அறவிடப்பட்டுள்ளது.

மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இரண்டு தடவைகள் சேவையைப் பெற்றுள்ளதோடு அதற்காக 2.68 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளார்.

அதேநேரத்தில் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஒரு தடவை சேவையைப் பெற்றுக் கொண்டதோடு அதற்காக 1.24 மில்லியன் ரூபாவையும் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஒரு தடவை சேவையைப் பெற்றுள்ளதோடு அதற்காக 1.6 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளார்.

இருப்பினும், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரும் அதன் தலைவருமான தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பிரசாரத்தின்போது ஆகாய வழிப் போக்குவரத்து சேவையைப் பயன்படுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அண்மைய பதிவுகள்