தேர்தல் பிற்போடும் கருத்துக்கு விக்னேஸ்வரன் வரவேற்பு
ஜனாதிபதித் தேர்தலையும், பொதுத் தேர்தலையும் பிற்போடுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார முன்வைத்துள்ள கருத்துகளுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தனது வரவேற்பைத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (28)நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
தற்பொழுது இந்த நாடு மிகவும் பொல்லாத பொருளாதார ரீதியான பிரச்சினைகளில் அமிழ்ந்திருக்கின்றது.
இவ்வாறானதொரு ரீதியில் நாங்கள் ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் நடத்துவமாக இருந்தால் புதிதாக வேறுயாராவது பதவி நிலைகளுக்கு வருகின்ற பட்சத்தில் இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட பொருளாதாரச் செயற்பாடுகள் யாவும் மாற்றமடையலாம்.
இது எமது பொருளாதாரத்தில் தாக்கத்தைச் செலுத்தலாம்.
ஆதலால், ஜனாதிபதித் தேர்தலையும், பொதுத்தேர்தலையும் பிற்போடுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார முன்வைத்துள்ள கருத்துகளை நான் வரவேற்கின்றேன்.
இதனை இவர்கள் எவ்வாறு நிறைவேற்றப் போகின்றார்கள்? என்று எனக்குத் தெரியவில்லை.
மக்கள் தீர்ப்பின்மூலம் நிறைவேற்றப் போகின்றார்களா? அல்லது நாடாளுமன்ற பெரும்பான்மையின் மூலம் நிறைவேற்றப் போகின்றார்களா? என்பது குறித்து சிந்திக்கவேண்டும்.
பெரமுனவினர் தற்போது எத்தனை அறிக்கைகளை வழங்கினாலும், என்ன தான் தெரிவித்தாலும் மக்கள் முன்னிலையில் தேர்தலுக்காகச் சென்றால் தமக்கு வெற்றிகிட்டாது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.
ஆதலால், தேர்தலைப் பிற்போட பெரமுனவினர் ஆதரவை வழங்கவே செய்வார்கள்.
ரணில் விக்கிரமசிங்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்லர் என்பதற்கு மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
ஆனால், அவரை எதற்காகக் கொண்டு வந்தார்கள்? மக்களால் தூக்கி எறியப்பட்ட ஜனாதிபதிக்குப் பதிலாக இவரைப் பதவிக்கு கொண்டு வந்தார்கள்.
தங்களால் முடியாததை இவர் செய்வார் என்ற அடிப்படையிலே பதவிக்குக் கொண்டுவரப்பட்டார்.
இவர் தனது கெட்டித்தனத்தை பொருளாதார ரீதியாகக் காட்டியுள்ளார்.
பொருள்களின் விலை, வரிசைமுறை அவை அனைத்தும் நீக்கப்பட்டு தற்பொழுது ஏதோ நாடு இயங்கிக் கொண்டிருக்கின்றது.
மக்களுடைய ஆணையால் அவர் வரவில்லை என்றால் எதற்காக அவரை இந்த இரண்டு வருடங்கள் விட்டு வைத்திருக்க வேண்டும்.
இதுவரை காலமும் இருக்கின்ற ஜனாதிபதியை இன்னும் ஒரு இரண்டு வருடத்துக்குப் பயணிக்க விடுவதால் எந்தப் பிரச்சினையும் வரப்போவதில்லை.
நாடு வங்குரோத்து நிலையை அடைகின்ற பொழுது அவரை கொண்டுவந்துவிட்டு தேர்தலை பிற்போடுகின்ற பொழுது அவர் மக்கள் ஆணையற்றவர் என்று கூறுவதில் எந்தவிதமான பயனும் இல்லை - என்றார்.