யாழ்.நகரில் நகைக் கடையில் நூதனமான முறையில் பணத்தை அபகரித்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி கைது
யாழ்ப்பாண நகரில் நகைக் கடைக்குச் சென்று நூதனமான முறையில் பணத்தை அபகரித்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி 5 இலட்சம் ரூபா பணத்துடன் கைதுசெய்யப்பட்டார்.
யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜெயசிங்கவின் வழிகாட்டலுக்கமைய யாழ்ப்பாண குற்ற விசாரணை பொலிஸ் பொறுப்பதிகாரி கெலும் பண்டார தலைமையிலான குழுவினர் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து குறித்த செயலுக்கு உடந்தையாக இருந்த வான் சாரதி உள்ளிட்ட 3 பேர் கண்டியில் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இரண்டு சந்தேக நபர்களை தேடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மையில், யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக்கடை ஒன்றுக்குச் சென்ற குழு, பொலிஸ் புலனாய்வு பிரிவு என தெரிவித்து 30 இலட்சம் ரூபா பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் பதிவானது.
இது தொடர்பில் கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன், பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
அதற்கமைய, சுன்னாகம் பகுதியில் நேற்று முன்தினம் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.