உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவ இரு விசாரணை அறிக்கைகளையும் திங்கட்கிழமை வெளியிடுவேன்.” - உதய கம்மன்பில தெரிவிப்பு
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான இரு விசாரணை அறிக்கைகளையும் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடுவேன்.” - என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரு ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.
அவற்றை பகிரங்கப்படுத்துவதற்கு அரசாங்கத்துக்கு 7 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளேன்.
இக் காலப் பகுதிக்குள் அறிக்கை வெளியிடப்படும் என்ற உத்தரவாதத்தை அரசாங்கம் வழங்கினால் என்னிடம் உள்ள அறிக்கைகளை அரசாங்கத்திடம் கையளிப்பேன்.
அவ்வாறு இல்லாவிட்டால் நான் கூறியதுபோன்று எதிர்வரும் திங்கட்கிழமை அறிக்கைகளை வெளியிடுவேன்.
பாரிய குற்றம் இழைப்பதாக கூறி நாம் வெளிப்படுத்தவிருக்கும் அறிக்கையை வெளிப்படுத்தாமல் தடுக்க முடியாது.
எதிரிக்கு அஞ்சாமையின் காரணமாக தான் நாம் துணிச்சலுடன் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளோம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஓய்வுபெற்ற நீதியரசர்களான இமாம் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜூலை மாதம் 25 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கை அவரிடம் மூன்று மாதங்கள் இருந்தன. ஆனால் அந்த அறிக்கையில் விடயங்கள் வெளிப்படுத்தப்படவில்லை.
அநுரகுமார ஜனாதிபதியின் கரங்களுக்கு இந்த அறிக்கை கிடைக்கப்பெற்று மூன்று நாட்களுக்குள் அறிக்கையின் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி அலுவலகத்தின் தகவல்களை திருடும் எலியை முதலில் அவர்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
அதுவே அரசாங்கத்துக்கு சிறந்த விடயமாக அமையும்.
நான் இந்த விடயத்தை வெளியிடுவதற்கு முன்னராக அரசாங்கத்தின் இரகசிய தகவல்களை வெளியிடல் குறித்த சட்டத்தின் ஊடாகவோ,பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் சட்ட திட்டங்களுக்கு அமையவோ அந்த அறிக்கையை வெளியிட முன்னர் என்னை கைது செய்யவதற்கான கலந்துரையாடலொன்று அரசாங்கத்தின் உயர் மட்டக்குழுவுடன் இடம்பெற்றுள்ளது.
தேசிய பாதுகாப்பு கருதி இந்த அறிக்கையின் இரகசிய தகவல்களை நான் வெளியிடப்போவதில்லை.
அதுவும் இந்த அறிக்கைகள் இரண்டையும் வெளிப்படுத்த தயார் என ஜனாதிபதி அல்லது அமைச்சர் விஜித ஹேரத் கூறும் வரை அந்த அறிக்கையின் விடயங்களை வெளிப்படுத்தப் போவதில்லை என உறுதியளிக்கின்றேன்.
இருப்பினும் எந்த காரணத்துக்காகவும் என்னிடமுள்ள அறிக்கைகளை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க நான் தயாராகவில்லை.
இத்தகைய பின்னணியில் ஜனாதிபதி அந்த அறிக்கையை வெளியிடவில்லையாயின் நான் எதிர்வரும் திங்கட்கிழமை அந்த அறிக்கையை வெளியிடுவேன் - என்றார்.