வன்னி எம்.பி செல்வம் அடைக்கலநாதனுக்கும், பிரதமர் ஹரிணி அமல சூரியவுக்கும் இடையில் சந்திப்பு
வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதனுக்கும், பிரதமர் ஹரிணி அமல சூரியவுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று (21) சனிக்கிழமை பிரதமரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது தலைமன்னார் பகுதியில் இராணுவம் பொலிஸ், மற்றும் கடற்படையால் கையகப்படுத்தியுள்ள மக்கள் காணிகள், பொது இடங்கள், ஆலயங்களுக்கு சொந்தமான காணிகளில் இருந்தும் அரசபடைகள் வெளியேறி மக்களது பாவனைக்காக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதேவேளை, ஐயப்ப பக்தர்களால் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம், இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு ஐயப்ப சாமி பக்தர்கள் செல்லவுள்ள நிலையில் தமது யாத்திரிகைக்காக இந்திய பயணத்துக்கான விமான கட்டணம் அதிகரித்த வண்ணம் உள்ளதையும், அதனை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் கடவுசீட்டை பெறுவதற்காக பக்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் தெரிவிக்கப்பட்டது.
தமது பயணத்தின் நிமித்தம் கொழும்பு நகருக்கு பல அசௌகரியங்களுக்கு மத்தியில் வந்து இந்து கலாச்சார அமைச்சிடம் கையெழுத்து பெற்ற பின்னரே கடவுச் சீட்டை பெற்றுக் கொள்ளும் நிலை காணப்படுவதும் சுட்டிக்காட்டப்பட்டது.
அதன் அடிப்படையில் பிரதமர் ஹரிணி அமலசூரியவுடனான இன்றைய சந்திப்பு பிரதமரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
பிரதமரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த கோரிக்கைகளை முன்வைத்தார்.
இதன் போது தலைமன்னாரில் இருந்து மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட பிரதிநிதிகளும், ஐயப்ப சாமி பக்தர்கள் சிலரும் நாடாளுமன்ற உறுப்பினருடன் பிரதமரை சந்தித்துள்ளனர்.