இலங்கையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் ம.பிரதீபன் தெரிவிப்பு
நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ். மாவட்டத்தில் 4 லட்சத்து 92 ஆயிரத்து 280 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
கிளிநொச்சியில் ஒரு லட்சத்து 907 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்
வாக்காளர்கள் வாக்களிக்க செல்வதற்கான விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக தீவக பகுதிகளுக்கு செல்வதற்கு குறிகட்டுவான் பகுதியில் இருந்து விசேட படகு சேவைகள் இடம்பெறும்.
யாழ்ப்பாணத்தில் ஒரு வன்முறை சம்பவமும் 62 சட்ட மீறல்களும் பதிவாகியுள்ளன.
அது தொடர்பிலான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாக்களிப்பு வியாழக்கிழமை காலை 7 மணியில் இருந்து மாலை 4 வரையில் வாக்களிக்க முடியும்.
வாக்கெண்ணும் நடவடிக்கைகள் யாழ் மத்திய கல்லூரியில் இரவு ஆரம்பிக்கப்படும்.
அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தார்.