வவுனியா சிறைச்சாலையில் தவறான முடிவெடுத்து கைதியொருவர் உயிரிழந்தார்.

1 month ago



வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தவறான முடிவெடுத்து கைதியொருவர் நேற்று சனிக்கிழமை (23) இரவு உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

துஷ்பிரயோக குற்றம் ஒன்றுக்காக வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த இந்த கைதி நேற்றிரவு சிறைக்கூடத்துக்குள் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்துள்ளார்.

இதன்போது உடனடியாக சிறைக் காவலர்கள் அவரை மீட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது, அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த 57 வயதான நபர் ஆவார்.

நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் கடந்த 19 ஆம் திகதி முதல் சிறை வைக்கப்பட்டிருந்தார்.

எதிர்வரும் 3 ஆம் திகதி வழக்கு விசாரணை இடம்பெற இருந்த நிலையில் மேற்படி நபர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

பதில் நீதிவான் த.அருள்            சிறைச்சாலைக்குச் சென்று சம்பவம் இடம்பெற்ற இடத்தைப் பார்வையிட்டதுடன், விசாரணைகளையும் நடத்தியிருந்தார்.

அத்துடன் வவுனியா        வைத்தியசாலைக்கும் சென்று சடலத்தைப் பார்வையிட்டார்.

சட்ட வைத்திய அதிகாரியின் உடற் கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், மேற்படி நபர் கொல்லப்பட்டாரா அல்லது தவறான முடிவெடுத்து மரணித்தாரா என்ற கோணத்தில் தடவியல் பொலிஸாரின் உதவியுடன் வவுனியா பொலிஸார்      விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.