பிரிவுபடாத இலங்கைக்காக சம்பந்தன் உழைத்தார்- மனோ தெரிவிப்பு

6 months ago

பன்மைத்துவமும் சமத்துவமும் உறுதிப்படுத்தப்படும் ஒரு தீர்வையே சம்பந்தன் கோரினார். ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் துப்பாக்கியால் பெறமுடியாத விடயங்களைச் சம்பந்தன் பேச்சால் பெற முயற்சிக்கின்றார் என சிங்கள மக்களிடம் உரைத்தார்கள். அந்தப் போக்கு இன்னும் மாறவில்லை. அது மாறும் வரை நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் இரண்டாம், மூன்றாம் தரப் பிரஜைகளாகத்தான் வாழ வேண்டியிருக்கும். இதற்கு நாம் ஒருபோதும் தயாராக இல்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

இரா.சம்பந்தனின் இறுதி நிகழ்வில் பங்குகொண்டு அஞ்சலி உரையாற் றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற் றுகையில் கூறியவை வருமாறு:-

நல்லாட்சிக் காலத்தில் கடைசி முயற்சியாக வழிகாட்டல் குழுவில் இருந்து இந்த நாட்டிற்கு புதியதொரு அரசமைப்பைக் கொண்டு வந்து பிரிபடாத- ஒரே இலங்கைக்குள் - சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் - பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மக்கள் - ஒரே குடும்பத்தின் அங்கத்தவர்களாக வாழக் கூடியதான நிலைமையை ஏற்படுத்த அவர் அயராது உழைத்தார். இதற்கு சாட்சியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவும் உள்ளார். அன்று பிரதமராக இதே வழிகாட்டல் குழுவின் தலைவராக அவர் இருந்தார். இங்கே நண்பர்கள் சுமந்திரன், ரவூப் ஹக்கீம், றிசாட் பதியுதீனும் கூட சாட்சிகளாக இருந்தார்கள்.

சம்பந்தன் வேறு என்ன கேட்டார்? பிரிபடாத ஒரே இலங்கைக்குள்ளே பன்மைத்துவம் உறுதி செய்யப்பட வேண்டும். சமத்துவம் உறுதி செய்யப்பட வேண்டும் என்றார். வேறு ஒன்றும் கேட்கவில்லை.

பௌத்தத்திற்கு முன்னுரிமை என்ற விடயத்தையும் அவர் தொட்டும் பார்க்கவில்லை. இதற்கு நண்பர்கள் சுமந்திரன், ரவூப்ஹக்கீம், றிசாட் பதியுதீனும் சாட்சியம் பகர்வார்கள்.

இங்கே பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையின் பேச்சை கேட்க மகிழ்ச்சியாக இருந்தது.

பிரிபடாத ஒரே இலங்கைக்குள் வாழ விரும்புகின்றோம் நாங்கள். அதற்காக சம்பந்தன் உழைத்தார். இதற்காக தமிழ் மக்களிடம் இருந்தும் கடுமையாக விமர் சனங்களை அவர் எதிர்கொள்ள வேண்டி இருந்தது.

சிங்கள அப்பாவி மக்கள் மத்தியிலே சென்ற அரசியல்வாதகள், இவர்தொடர்பில் தப்பாக எடுத்துக்கூறி நாட்டைப் பிரிக்கப் பார்க்கின்றார், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் துப்பாக்கியால் பெறமுடியாத விடயங்களை எல்லாம் பேச்சால் பெற முயற்சிக்கின்றார் எனப் பொய் உரைத்தார்கள். அந்த யதார்த் தப் போக்கு இன்னும் மாறவில்லை. மாறும் வரை நாட்டில் வாழும் தமிழ். முஸ்லிம், மலையக மக்கள் இரண்டாம். மூன்றாம் தர பிரஜைகளாகத்தான் வாழ வேண்டியிருக்கும்.

அதற்கு நாம் ஒருபோதும் தயாராக இல்லை. அதை நான் அறுதியிட்டுக் கூறுகின்றேன்.

இதை நான் சொல்லாமல் இருந்தால் மனச்சாட்சிக்கு விரோதமாக செயல்பட்டவனாக இருப்பேன். ஆகவே இந்த முறைமை மாற்றப்பட வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் நாடாளுமன்றில் பேசும்போதும் சம்பந்தனுக்கும் தனக்கும் உள்ள உறவை விவரித்தார். எதிர் காலத்திலே விரைவிலே மாற்றம் நிகழ வேண்டும் அதிலே எல்லா மக்களும் சமத்துவம், பன்மைத்துவம் அடிப்படையில் இந்த நாடு ஓர் இனத்திற்கும். ஒரு மதத்திற்கும் சொந்தமல்ல.

பல மொழி, பல மதம் கொண்ட நாடாக மாற வேண்டும். அதற்காவே நாம் உழைக்கின்றோம். - என்றார்.

அண்மைய பதிவுகள்