இலங்கையில் அரச உடமையாக்கப் பட்ட இந்தியப் படகுகளை ஏலம் விட்டு அப் பணத்தை உயிரிழந்த கடற்படையைச் சேர்ந்தவரின் குடும்பத்திறகு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
இலங்கைக் கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட சமயம் கடற்படையினரால் பிடிக்கப்பட்டு நீதிமன்றங்களினால் அரச உடமையாக்கப்பட்ட இந்தியப் படகுகளே இவ்வாறு ஏலம் விடப்பட்டு பணம் உயிரிழந்த கடற்படையைச் சேர்ந்தவரின் குடும்பத்திற்கு வழங்கப்படவுள்ளது.
இதற்காக தற்போது இலங்கையில் அரச உடமையாக்கப்பட்ட இந்தியப் படகுகள் எந்த மாவட்டத்தில், எத்தனை படகுகள் உள்ளன என்ற விவரம் பெறப்பட்டு ஏலத்திற்கான பணிகளை முன்னெடுக்குமாறு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர்களிற்கு கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வாய்மொழியாக உத்தர விட்டுள்ளார்.
இந்த உத்தரவிற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 41 படகுகளும், மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தலா 5 படகுகளும், திருகோணமலை மாவட்டத்திலும் இரு படகுகளும் உள்ளன எனக் கண்டுகொள் ளப்பட்டுள்ளது.
இதேநேரம் 2021 ஆம் ஆண்டிற்கு முன்னர் பிடிக்கப்பட்ட இந்தியப் படகுகள் அனைத்தும் 22 ஆம் ஆண்டு ஏலத்தில் விற்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.