யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்குவதற்கான விடயதானங்களை எம்.பி பொ. கஜேந்திரகுமார் மாவட்ட பதில் அரசாங்க அதிபருக்கு வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்ட நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பதற்கான விடயதானங்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாவட்ட அரசாங்க அதிபருக்கு வழங்கியுள்ளார்.
20 முக்கிய விடயங்களை உள்ளடக்கிய விடயதானங்களை அபிவிருத்தி குழுக் கூட்ட நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பதற்காக அவர் இவ்வாறு வழங்கியுள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதி உடனடியாக அமைக்கப்படல்.
யாழ். போதனா வைத்தியசாலையில் அதிகளாவான நோயாளர்களால் நிரம்பி வழிகின்றது.
பல விடுதிகளில் அவ்வப் போது நோயாளர்கள் கட்டில்கள் இல்லாத நிலையில் நிலங்களில் படுக்கின்ற நிலைமை சீர் செய்யப்படல்.
யாழ் பண்ணையில் அமைந்துள்ள காச நோய் சிகிச்சைப் பிரிவில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படல் வேண்டும்.
மயிலிட்டியில் அமைந்திருந்த காசநோய் பிரிவை அந்த இடத்தில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மயிலிட்டியில் இயங்கிய காசநோய் வைத்தியசாலை தற்காலிகமாக கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் இயங்குகிறது.
ஆனாலும் அங்கு ஆளணிகள் எதுவும் நியமிக்கப்படவில்லை. உடனடியாக ஆளணி நியமனம் செய்யப்படல் வேண்டும்.
பண்ணையில் உள்ள மார்பக சிகிச்சை நிலையத்திற்கென நிரந்தரமான எக்ஸ்றே றேடியோ கிறாப்பர் இல்லை.நிரந்தரமாக நியமிக்கப்படல் வேண்டும். (தற்போது திங்கள் புதன் ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே வருகின்றார்.
பண்ணையிலுள்ள மார்பக சிகிச்சை நிலையத்தில் பரிசோதனைக்காக பெறப்படும் சளிமாதிரிகளை பாதுகாப்பாக களஞ்சியப்படுத்துவதற்கான குளிர்சாதனப் பெட்டிகள் பெரும் பற்றாக்குறையாக உள்ள நிலையில் பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரிகள் ஐந்து நாட்களுக்குள் சோதனை செய்யப்படல் வேண்டும்.
ஆனால் உரிய கருவிகள் இன்மையால் ஒரு வருடங்களாக சேமிப்பில் உள்ள நிலை காணப்படுகின்றது. இந்நிலை சீர் செய்யப்படல் வேண்டும்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெருமளவான இளையோர் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு அடிமையாகியுள்ள நிலையில் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை புனவாழ்வளித்து மீட்டெடுப்பதற்கான புனர்வாழ்வு நிலையம் யாழ்.மாவட்டத்தில் அமைக்கப்படல்.
யாழ் மாவட்டத்தில் கடற்தொழில் படகுகளை பாதுகாப்புக்கான கல்லணைகளை பின்வரும் பகுதிகளில் அமைத்தல்.
பருத்தித்துறை மூர்க்கம், முனை, கொட்டடி கடற்கரை, சுப்பர்மடம். இன்பர்சிட்ட கடற்கரை, சக்கோட்டை கடற்கரை, திக்கம் கடற்கரை, கொத்தியால் கடற்கரை, றேவடி கடற்கரை, ஆதிகோவிலடி கடற்கரை, தொண்டமனாறு கடற்கரை, பலாலி கடற்கரை. சேந்தான்குளம், மாதகல் கடற்கரை ஆகிய இடங்களில் படகுகள் தரித்து நிற்கும் இடங்களில் படகுகளைப் பாதுகாப்பதற்கான பாதுகாப்புக் கல்லணைகள் அமைக்கப்படல் வேண்டும்.
இறக்கப்படும் நுழைவு வான்கள் நீண்டகாலமாக ஆழப்படுத்தப்படாமையினால் படகுகள் சேதமடைகின்றன.
படகுகள் சேதமடைவதனை தடுக்கும் வகையில் குறித்த இடங்கள் உடனடியாக ஆழப்படுத்தப்படல் வேண்டும்.
கொத்தியால் கடற்கரையில் படகுகள் தரிப்பிடத்தில் அகழப்பட்ட மண்ணை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தல்.
வல்வெட்டித்துறை கிழக்கு கிராமிய கடற்தொழில் அமைப்பினருக்குச் சொந்தமான படகுகள் தரித்து நிற்கும் பகுதியிலிருந்து அகழப்பட்ட மண் கடற்கரையில் குவிக்கப்பட்டுள்ளது.
மண்ணை அகற்றுவதற்கான திணைக்களங்கள் இன்னமும் வழங்கவில்லை.
எனவே குறித்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ள மண்ணை அண்மையிலுள்ள பொது அமைப்புக்களது பயன்பாட்டுக்காக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படல் வேண்டும்.
இந்திய மீனவர்களால் வலைகள் படகுகள் சேதமாக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்படல் வேண்டும்.
கனமழை வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட விவசாய அழிவுகளுக்கு வழங்கப்படல் வேண்டும்.
யாழ் குடாநாட்டில் சொந்தக் காணிகள் மற்றும் வீடுகள் இல்லாதவர்களுக்கு வழங்கவும் வீடுகள் கட்டிக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீட்டுத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி போதாமலுள்ள நிலையில் நிதியை அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு 20 கோரிக்கைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு பாராளுமன்ற உறுப்பினர் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு செயலாளரான மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பியுள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
