வாக்குகளைப் பெறுவதற்காக அரசியல் பிரதிநிதிகள் சிலர் மக்களுக்கு இலஞ்சம் வழங்குவதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் குற்றஞ் சுமத்துகின்றனர்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 84 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை அதிகாரம் மற்றும் சொத்துகளை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டுக்களென பெப்ரல் அமைப்பின் நிறை வேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித் தார்.
பொருளாதார நெருக்கடி நிலவும் இந்தக் காலக்கட்டத்திலும் பிளாஸ்ட்டிக் கதிரைகள், கோழிக்குஞ்சுகள், பாடசாலை உபகரணங்கள் மக்களுக்கு வழங்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தலை நோக்காகக் கொண்டு நாடளாவிய ரீதியில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இது குறித்து மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் ரோஹன ஹெட்டியாராச்சி வலியுறுத்தினார்.
இதேவேளை, தேர்தல் சட்டங்களை மீறியதாக இதுவரை 44 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்தார்.
தேர்தல் இலஞ்சமாக பல்வேறு பொருட்கள் பகிர்ந்தளிக் கப்படுவதாக கடந்த 09 ஆம் திகதியிலிருந்து முறைப்பாடுகள் கிடைத்த வண்ணமுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவில் 09 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
தேர்தல் சட்டங்களை மீறியதாக 04 முறைப்பாடுகளும் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 05 முறைப்பாடுகளும் தமக்கு கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.