உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மக்கள் நத்தார் பண்டிகையை கொண்டாடுகின்றனர்
உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மக்கள் இயேசு பிரான் பிறந்த தினமான டிசம்பர் 25ஆம் திகதியன்று நத்தார் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
பெத்லஹேமில் ஒரு மாட்டுத் தொழுவத்தில் இவ்வுலகிற்கு அவதரித்த யேசு பாலகன் மனித வர்க்கத்தின் பாவங்களை நீக்குவதற்காக பிறந்ததை இன்றைய தினம் மக்கள் நினைவு கூருகின்றனர்.
கனடா உட்பட பல்வேறு நாடுகளிலும் நத்தார் தினம் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றது.
ஓராண்டுக்கும் மேலாக இஸ்ரேலிய போர் மோதல்களுக்கு மத்தியிலும், காசாவில் உள்ள கிறிஸ்தவர்களும் இந்த ஆண்டு நத்தார் பண்டிகையை கொண்டாடினர்.
அதன்படி, காசாவில் கிறிஸ்துமஸ் ஆராதனை நிகழ்வுகள் காஸா நகரில் உள்ள ஹோலி பெமிலி தேவாலயத்தில் நடைபெற்றது.
இதேவேளை, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தீயினால் சேதமடைந்த பாரிசில் அமைந்துள்ள 850 வருட பழமையான தேவாலயம் நோட்ரே டேம் கதீட்ரலில் கிறிஸ்துமஸ் ஆராதனைகள் நடைபெற்றன.
தேவாலயம் மீண்டும் திறக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் கிறிஸ்துமஸ் ஆராதனை இதுவாகும்.
இதற்கிடையில், யுக்ரைனில் உள்ள கிறிஸ்தவர்கள் கடந்த வருடத்தைப் போலவே இன்றும் நாளையும் கிறிஸ்துமஸ் கொண்டாடுவார்கள்.
2023 இற்கு முன்பு, ஜூலியன் நாட்காட்டியின்படி, அவர்கள் ஜனவரி 7 அன்று கிறிஸ்துமஸ் கொண்டாடினர்.
தொடர் ரஷ்ய தாக்குதல்களால் கடும் மின் நெருக்கடியை சந்திக்க வேண்டியுள்ள பின்னணியில் உக்ரைன் மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவது சிறப்பம்சமாகும்.