ஐனாதிபதி வடக்கு விஜயத்தின் போது ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க முடியும் என்று கடந்த ஆண்டு யாழ்.மாவட்ட செயலகத்தில் ஐனாதிபதி ஊடகப் பிரிவு யாழ்ப்பாண ஊடகவியலாளர்களை சந்தித்து வாக்குறுதியளித்திருந்தது.
அந்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்புக்கு பின்னர் பல தடவைகள் யாழ்ப்பாணம் வந்த ஐனாதிபதியின் நிகழ்வுகளுக்கு ஊடகவியலாளர்கள் அனுமதி மறுக்கப்பட்டது.
ஐனாதிபதி ஊடகப் பிரிவு தமது வட்சப் குறூப்பில் ஊடகவியலாளர்களை இணைத்துக் கொண்டது தான் மிச்சம். அவர்கள் தாம் சொல்வது தான் செய்தி என்று நினைக்கிறார்கள் போலும்.
அழையா விருந்தாளி போல வெளியில் நின்று செய்தி சேகரிக்கும் நிலையில் தமிழ் ஊடகவியலாளர்கள் உள்ளனர்.
ஐனநாயக நாடு என்று பெயரளவில் சொல்லும் ஐனாதிபதி, தான் பங்கெடுக்கும் நிகழ்வுகளுக்கு ஊடகவியலாளர்களை அனுமதிக்காதது நாட்டுக்குத் தான் அபகீர்த்தியை கொண்டுவரும் என்பது உண்மை.
சர்வதேசம் இலங்கையை அவதானித்து வருவது சர்வதேச மன்னிப்புச் சபை முள்ளிவாய்க்காலில் மண்டியிட்டு நினைவுகூர்ந்ததில் இருந்து தெரிகிறது.
தமிழ் ஊடகவியலாளர்களின் மக்களின் பணி எவ்வளவு காத்திரமானதென்பது. அதனால் என்னவோ ஐனாதிபதிக்கு அருகில் ஒரு போதுமே தமிழ் ஊடகவியலாளர்கள் செல்ல முடியாத நிலைமை வருமோ என்ற கேள்வி எழுகிறது.
ஜனாதிபதி வடக்கில் புதிய கட்டடங்களை திறக்க மட்டும் வரவில்லை தனது தேர்தல் முன்னோட்டம் காண வந்தவர் ஒழிய அந்த மக்களின் பிரச்சினையைக் கண்டு அதற்கான தீர்வை வழங்க வரவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
தமிழ் மக்களோடு ஊடகவியலாளர்கள் நிற்பதால் ஜனாதிபதி பங்கெடுத்த நிகழ்வுகளில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டது என்றுதான் சொல்ல முடியும்.
முல்லைத்தீவு கேப்பாபிலவு காணி விடுவிப்புத் தொடர்பில் மக்கள் போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்.
அவர்களில் இருவரை வடக்கு ஆளுநர் திருமதி சார்ள்ஸ், அரச தலைவரிடம் அழைத்துச் சென்றிருந்தார்.
இந்த நிலையில் அரச தலைவர் ஊடகப் பிரிவு இது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கையில், இரண்டு பெண்கள் மாத்திரமே போராடியிருந்த நிலையில் அவர்களை ஆளுநர் சந்தித்திருந்தார் என்றும், ஆளுநரிடம் அரச தலைவரை சந்திக்க கோரிக்கை விடுத்ததாகவும் இதை ஆளுநர் அரச தலைவரிடம் தெரியப்படுத்தி அதையடுத்து அரச தலைவர் அவர்களைச் சென்று சந்தித்தாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்துடன் அவர்கள் முன்வைத்த கேப்பாபிலவு காணிக்கோரிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும் அரச தலைவர் உறுதியளித்தார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரச தலைவர் கலந்து கொண்ட நிகழ்வு புதுக்குடியிருப்பு மத்திய மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற நிலையில் அதற்கு வெளியே மக்கள் போராட்டம் நடத்தினர்.
அவர்கள் அரச தலைவரை சந்திக்க முற்பட்டபோது சிறிலங்காப் பொலிஸார் தடுத்தனர்.
இதன் பின்னர் அங்கு வந்த ஆளுநர் அவர்களின் மனுவைப் பெற்றுக்கொண்டார்.
போராட்டக்காரர்களில் இருவர் பொலிஸாரின் வாகனத்தில் ஏற்றி செல்லப்பட்டே அரச தலைவரை சந்திக்க விட்டனர்.
ஆனால் இதை மறைத்து அரச தலைவர் ஊடகப் பிரிவு ஊடக அறிக்கை அனுப்பி வைத்துள்ளது. பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என்று போராடிய மக்களின் செய்தியை மறைக்க வெளிக்கிட்ட தலைவரின் ஊடகப் பிரிவை என்ன செய்ய முடியும்.