இந்தியா ஹிமாச்சலப் பிரதேசத்தின் மணாலியில் பனிப்பொழிவு காரணமாக நேற்று(23) பல வாகனங்கள் சிக்கிக்கொண்டன என தெரிவிக்கப்படுகிறது.
அடர்ந்த பனிப்பொழிவு காரணமாக ரோஹ்தாங்கின் சோலாங் மற்றும் அடல் சுரங்கப் பாதையில் சுற்றுலாப் பயணிகளும் பல மணிநேரம் தங்களின் வாகனத்தில் சிக்கித் தவித்தனர்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் நீண்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டன.
மீட்பு நடவடிக்கையை தொடங்கவும், சுமார் 700 சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவும் பொலிஸார் விரைவான நடவடிக்கையை எடுத்திருந்தனர்.
உள்ளூர் அதிகாரிகளும் மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்தனர்.
இருப்பினும், பனிப்பொழிவு மாநிலத்தின் மற்ற பகுதிகளை குளிர்கால அதிசய நிலங்களாக மாற்றியது.
ஹிமாச்சலின் பனி படர்ந்த மலைப் பகுதியில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
பனிப்பொழிவு அழகின் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதனிடையே, எதிர்வரும் வியாழன் வரை நடுத்தர, உயரமான மலைப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை மற்றும் பனிப்பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு நிலையம் கணித்துள்ளது.