மலேசியா மற்றும் அதன் அண்டை நாடான தாய்லாந்தில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 12 பேர் பலியாகியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வட மலேசியாவில் 122,000 இற்கும் அதிகமான மக்களும், தெற்கு தாய்லாந்தில் சுமார் 13,000 பேர் இடம் பெயர்ந்துள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடும் மழை மற்றும் புயல் எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கவலை வெளியிடப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்த மக்களுக்குத் தற்காலிக தங்குமிடங்கள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்புப் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு நாடுகளின் சமூக ஊடகங்கள் மற்றும் உள்ளூர் செய்திகளில் வீடுகள் நீரில் மூழ்கியிருக்கும் காட்சிகள் காட்டப்படுகின்றன.
தாய்லாந்தின் சதெங் நோக் மாவட்டத்தில், வெள்ளத்தில் மூழ்கிய வீட்டின் கூரையிலிருந்து சிறுவன் ஒருவனை மீட்புப் பணியாளர்கள் மீட்கும் காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தெற்கு தாய்லாந்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக 534,000 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.
அதேவேளை, முடிந்தவரைத் துரிதகதியில் இயல்பு நிலையைக் கொண்டு வருவதற்குச் சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என மலேசியப் பிரதமர் பெய்ரன்ங்ரன் ஷின வாத்ரா உறுதியளித்துள்ளார்.