இந்திய வெளிவிவகார அமைச்சர் தமிழ்த் தேசிய அரசியல் தரப்பினரை சந்திக்காமலேயே திரும்பிவிட்டார்
இந்திய வெளிவிவகார அமைச்சர் சு. ஜெய்சங்கர் தமிழ்த் தேசிய அரசியல் தரப்பினரை சந்திக்காமலேயே தனது பயணத்தை நிறைவு செய்தார்.
நேற்றைய தினம் நாட்டுக்கு வருகை தந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சு. ஜெய்சங்கர் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோரை சந்தித்து பேச்சுகளை நடத்தினார்.
அத்துடன், மிலிந்த மொறகொடவின் பாத்பைண்டர் பௌண்டேசனின் சிங்கள மொழி பெயர்ப்பான “தி இந்தியா வே” என்ற நூலின் முதல் பிரதியையும் அவர் பெற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், தமிழ்த் தேசிய அரசியல் தரப்பினரையும் அவர் சந்தித்துப் பேசுவார் என்று கூறப் பட்டபோதிலும் ஜெய்சங்கருடனான சந்திப்புக்கு எந்தவொரு தமிழ்த் தேசிய அரசியல் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.
ஒருநாள் பயணம் என்பதால் நேரமின்மையே தமிழ்த் தேசியத் தரப்பினரை அவர் சந்திக்காமைக்கான காரணமாக சுட்டிக்காட்டப்பட்டது.