கிளிநொச்சி மாவட்டத்தில் மண்டைக்கல்லாறு மற்றும் குடமூரூட்டி பகுதிகளில் பாரிய மணல் கொள்ளை அரங்கேறி வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
நடைபெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்ற ஜனாதிபதி தேர்தல் செலவிற்கென பண வசூலில் கிளிநொச்சியில் அரச திணைக்களமும், பொலிஸாரும் நேரடியாக களத்தில் குதித்துள்ள அதிர்ச்சியான சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் வனவளத்திணைக்களத்தின் ஆளுகைக்குள் உள்ள காட்டுப் பகுதிகளாக மண்டைக்கல்லாறு மற்றும் குடமூரூட்டி பகுதிகள் உள்ளன.
அங்கிருந்து மரங்கள் அனைத்தும் ஏற்கனவே தறிக்கப்பட்டு சூறையாடப்பட்டுள்ள நிலையில் தற்போது பாரிய மணல் கொள்ளை அரங்கேறி வருகின்றது.
பகிரங்கமாக ஆயுதம் தாங்கிய வனவள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் சகிதம் மணல் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் பகிரங்கமாக தொடரும் மணல் கொள்ளை தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே ஜனாதிபதி தேர்தல் செலவிற்கு நிதி வசூலிக்க கொழும்பிலிருந்து மேல்மட்ட அறிவித்தல்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் செலவிற்கென நிதி சேர்த்து அனுப்பவே மணல் வியாபாரத்தை பகிரங்கமாக நடாத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வனவளத்திணைக்கள மற்றும் பொலிஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அண்மையில் கிளிநொச்சி வருகை தந்து திரும்பியுள்ள நிலையில் மும்முரமாக வனவளத்துறை மற்றும் பொலிஸாரும் மணல் வியாபாரத்தில் குதித்துள்ளமை சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
நாள் தோறும் இரவு பகலாக வனவளத்திணைக்கள உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு வழங்க, மணல் நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஏற்றிச் செல்லப்படுவதாக உள்ளுர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
பெருமளவு வாகனங்கள் யாழ்ப்பாணம் நோக்கியே பயணித்து வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.