மாஹோ - அநுராதபுரம் இடையே புகையிரத சமிக்ஞையை நவீனப்படுத்துவதால் வடக்கு ரயில் சேவை ஆரம்பமாவது தாமதமாகும்!

3 months ago


மாஹோ - அநுராதபுரம் இடையே புகையிரத சமிக்ஞை அமைப்பை நவீனப்படுத்தி மீளவும் ரயில் சேவையை ஆரம்பிக்க நான்கு மாதங்கள் தேவைப்படும் என்று புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், வடக்கு புகையிரத மார்க்கத்தில் ரயில்களை இயக்குவது தொடர்பாக அமைச்சர் மற்றும் செயலாளருடன் கலந்துரையாடிய பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தது.

மாஹோ முதல் அநுராதபுரம் வரையிலான புகையிரதப் பாதை புனர்நிர்மாணத்துக்காக கடந்த ஜனவரி மாதம் முதல் மூடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஜனாதிபதித் தேர்தலுக்கு வசதியாக அந்தப் பாதை திறந்து வைக்கப்பட்டது.

இதனால், கடந்த 19 முதல் 22ஆம் திகதி வரை கொழும்பு - யாழ்ப்பாணம் விசேட ரயில் சேவைகள் இயக்கப்பட்டன. எனினும், வழமையான சேவைகளை முன்னெடுப்பதில் சிக்கல்கள் காணப்படுகின்றன என்று புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புகையிரத பாதை சமிக்ஞை அமைப்பை நவீனப்படுத்தும் திட்டத்துக்கு அங்கீகாரம் கிடைக்காததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.

மாஹோ முதல் அநுராதபுரம் வரை யில் 47 புகையிரத கடவைகள் உள்ளன. இவற்றில் 15 கடவைகள் பிரதான வீதிகளில் உள்ளன. இவற்றில் 9 கடவைகள் அடிக்கடி போக்குவரத்து நெரிசலில் சிக்குபவை.

எனவே, ரயில் சேவையை இயக்கினால் இந்தக் கடவைகளில் ஊழியர்களை பணிக்கு அமர்த்த வேண்டும் என்று புகையிரதத் திணைக்களம் கூறுகிறது.

அத்துடன், ரயில் சேவைகளை மீள ஆரம்பித்தாலும் மாஹோ - அநுராத புரம் இடையே தினசரி 22 சேவைகளையும் முன்னெடுக்க முடியாது.

சமிக்ஞை அமைப்பை நவீனப்படுத்தி மீள ஆரம்பிக்க 4 மாதங்களுக்கு மேல் ஆகும் என்று தெரிவிக்கப்படுகின்றது. 

அண்மைய பதிவுகள்