மூன்றாவது தவணை கடனாக 336 மில்லியன் டொலரை இலங்கைக்கு வழங்க ஐ. எம். எவ் அனுமதி.

6 months ago

இலங்கைக்கு வழங்கிய நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் மூன்றாவது தவணைக்கான கொடுப்பனவாக 336 மில்லியன் (33.6 கோடி) டொலரை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் (ஐ. எம். எவ்.) அனுமதி அளித்துள்ளது.

இதன் மூலம் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஐ. எம். எவ்வின் நிதி உதவி 100 கோடி டொலர்களாக உயர்வடைந்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவின் கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் இலங்கையுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட 48 மாதங்களுக்கான கடன் வசதியின் இரண்டாவது மீளாய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதன் கீழேயே இந்த நிதி இலங்கைக்கு கிடைத்துள்ளது.

முன்னதாக சர்வதேச நாணய நிதியத் தின் உத்தியோகபூர்வ அறிக்கையில், கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்காக கடன் மறுசீரமைப்பை முன்னெடுத்து செல்வதற்கான இலங்கையின் முன்னேற்றத்தை ஐ. எம். எவ்வின் பணிப்பாளர்கள் வரவேற்றுள்ளனர்.

2023 டிசெம்பர் மாதமளவில் சமூக செலவுகள் தவிர்ந்த ஏனைய இலக்குகளை போதுமான அளவில் பூர்த்தி செய்ய இலங்கையால் முடிந்துள்ளது.

எது எப்படி இருப்பினும் உத்தியோக பூர்வ கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதில் காணப்படும் தாமதத்தால் இலங்கையின் பொருளாதாரம் தொடர்ந்தும் எச்சரிக்கை நிலையிலேயே காணப்படுகின்றது.

பொருளாதாரத்தை சரியான பாதைக்கு கொண்டு வருவதற்காக கடன் மறுசீரமைப்பு செயன்முறையை இலங்கை விரைவுபடுத்துவது அவசியமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு 290 கோடி நீடிக்கப்பட்ட கடன் வசதியை தவணை அடிப்படையில் வழங்க ஐ. எம். எவ். முன்வந்திருந்தது.

ஒவ்வொரு கடன் தவணையும் விடுவிக்கப்பட்ட பின்னர் இலங்கை ஏற்படுத்திக் கொண்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு அடுத்த கடன் தவணை விடுவிக்கப்படும்.

இந்த அடிப்படையில் மூன்றாவது தவணையாக தற்போது 336 மில்லியன் டொலரை ஐ. எம். எவ். இலங்கைக்கு விடுவித்துள்ளது. முன்னதாக 2 தவணைகளில் 667 மில்லியன் டொலர் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்