குவைத் விமான நிலையத்தில் சிக்கித் தவித்த இந்திய பயணிகள் கடந்த திங்கள்கிழமை அதிகாலை மான்செஸ்டருக்கு புறப்பட்டனர்.
குவைத் விமான நிலையத்தில் 13 மணி நேரத்திற்கும் அதிகமாக சிக்கித் தவித்த 60 இந்திய பயணிகள் இறுதியாக கடந்த திங்கள்கிழமை அதிகாலை மான்செஸ்டருக்கு புறப்பட்டனர்.
இது குறித்து எக்ஸில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள குவைத்திலுள்ள இந்தியத் தூதரகம், நேற்று அதிகாலை 4.34 மணிக்கு மான்செஸ்டருக்கு கல்ஃப் ஏர் விமானம் இந்தியப் பயணிகளுடன் புறப்பட்டதாகக் கூறியது.
அதேநேரம், விமானம் புறப்படும் வரை தூதரக ஊழியர்கள், பயணிகளுடன் விமான நிலையத்தில் இருந்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மும்பையில் இருந்து இங்கிலாந்தின் மான்செஸ்டருக்கு ஞாயிறு ஜி.எப். 005 என்ற கல்ஃப் ஏர் விமானம் மூலம் இந்திய பயணிகள் பயணத்துள்ளனர்.
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால் மேற்படி விமானம் அவசரமாக குவைத் விமான நிலையத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டது.
விமான நிலையத்தில் சிக்கியிருந்த போது. உணவு, தங்குமிடம் அல்லது அடிப்படை உதவிகளை விமான நிறுவனம் வழங்கத் தவறியதால், அசௌகரியத்தை எதிர்கொண்டதாக பயணிகள் முறைப்பாடுகளை பதிவு செய்தனர்.
சில பயணிகள் விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்யும் காணொலிகள் சமூக ஊடகங்களில் வெளிவந்தன.
இந்த விடயம் தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்திய குவைத்தில் அமைந்துள்ள இந்தியத் தூதரகம், குவைத்திலுள்ள கல்ஃப் ஏர் உடன் இணைந்து விரைந்து நடவடிக்கை எடுத்தது.
அதேநேரம், பயணிகளுக்கு உதவ்வும் விமான நிறுவனத்துடன் ஒருங்கிணைக்கவும் தூதரகத்தின் ஒரு குழு விமான நிலையத்தில் இருந்து இதற்கான பணிகளை மேற்கொண்டிருந்தது.
இறுதியாக விமானம் நேற்று அதிகாலை 4.34 மணிக்கு மான்செஸ்டருக்கு புறப்பட்டதாகவும் குவைத்திலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.