ஜனாதிபதி தமிழ்ப் பொதுவேட்பாளர் விரைவில் அறிவிப்பு - ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தெரிவிப்பு

6 months ago

ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப் பொதுவேட்பாளரை விரைவில் அறிவிக்கவுள்ளதாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தெரிவித்துள்ளது.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக்கூட்டம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வவுனியா கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தின் பின்னரே, பொதுவேட்பாளர் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறீகாந்தா, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், ரெலோ இயக்கத்தின் செயலாளரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனா கருணாகரன், ரெலோ கட்சியின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.