ஜானாதிபதியின் யாழ். வருகையை முன்னிட்டு வேலையற்ற பட்டதாரிகள் யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்

2 months ago



ஜானாதிபதியின் யாழ். வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்புப் போரட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர் என்று வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (28) ஊடக சந்திப்பை மேற்கொண்டு இவ்வாறு கருத்து தெரிவித்த வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்க ஊடக பேச்சாளர் கி.டனிசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

வேலையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைக்கு சரியான வகையில் இதுவரை எந்தவொரு தரப்பினரும் தீர்வைத் தரவில்லை.

வடக்கின் ஆளுநரிடமும் பல தடவைகள் கோரிக்கை முன்வைத்திருந்தும் அவரும் எம்மை கண்டு கொள்ளாதவராகவே இருந்து வருகின்றார்.

இந்த நிலையில் வேலையற்ற பட்டதாரிகள் ஆகிய நாம் நாளை (29) ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை எமது பிரச்சினைகளை வெளிக்கொணரும் வகையில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம்.

எமது மூன்று நாள் போராட்டமானது நாளை (29) 'பசுமை தானம்' என்னும் தொனிப்பொருளில் மரக்கன்று விநியோகித்தலுடன் யாழ். வீரசிங்கம் மண்டப முன்றலில் ஆரம்பமாகவுள்ளது.

30 ஆம் திகதியன்று கலைத்தூது கலையரங்கில் இரத்ததான முகாம் நடைபெறவுள்ளது.

இறுதி நாளான 31 ஆம் திகதியன்று ஜானாதிபதியின் யாழ். வருகையை முன்னிட்டு மாவட்ட செயலகம் முன்பாகப் பட்டதாரிகள் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு எமது நிலையை எடுத்துக் கூறும் வகையில் கவனவீர்ப்புப் போரட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம்.

வடமாகாணம் தழுவிய ரீதியில் உள்ள பட்டதாரிகளின் சார்பில் ஒலிக்கும் குரலாக இது நடைபெறும்.

எமது இந்தப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்க அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்.- என்றர்.

இதேநேரம் குறித்த சங்கத்தின் தலைவர் சசிதரன் கூறுகையில்,

வேலையற்ற பட்டதாரிகள் என்ற வகைக்குள் கலைத்துறையில் பட்டங்களை பெற்றவர்களே முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலைக்கு நாட்டின் கல்வி கட்டமைப்பே காரணமாக இருக்கின்றது.

இதேவேளை, நாட்டின் கல்வி திட்டத்தின் ஊடாக முறையான தகுதி திறனை நாம் கொண்டிருக்கின்றோம்.

எமக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை எனில் அதற்கு முழுப்பொறுப்பும் இந்த கல்வி திட்டத்தைக் கொண்டிருக்கக் கூடிய அரசே ஆகும்.

வடமாகாணத்தில் இன்று பல்வேறுபட்ட திணைக்களங்களில் வேலை வாய்ப்பு வெற்றிடம் காணப்படுகின்றது.

இலங்கை அரச கட்டமைப்பின் பட்டபடிப்பு மூலமே நாம் கல்வித் தகுதியைப் பெற்றுள்ளோம்.

அதற்கு உரிய தொழில் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, அரசுக்கு அழுத்தம் கொடுக்கவே நாம் இவ்வாறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றோம்.

இதேநேரம், ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு எமது நிலைப்பாடுகள் அடங்கிய கோரிக்கைக் கடிதம் ஒன்றினை வழங்கியுள்ளோம்.

இந்த அரசு உருவாகிச் சில மாதங்களே கடந்துள்ளன.

இந்த அரசாவது எமக்கான தீர்வைத் தரும் என நாம் எதிர்பார்த்தோம் அதுவும் ஏமாற்றமாகவே இருக்கின்றது.- என்றார்.

அண்மைய பதிவுகள்