ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் வடக்கு -கிழக்கு இணைப்பின் முக்கியத்துவம் குறித்து இந்தியாவின் ஆளுங்கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவருக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப் பினர் சி. சிறீதரன் தலைமையிலான குழுவினருக்கும், பா. ஜ. க. தமிழகத் தலைவர் அண்ணாமலைக்கும் இடையில் திருகோணமலையில் இடம்பெற்ற சந்திப்பிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநர் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஆளுநர் செந்தில் தொண்டமானும் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது, திருகோணமலையில் தமிழ் மக்கள் முகங்கொடுத்துவரும் காணி அபகரிப்பு, மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல தரப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் அண்ணாமலைக்கு விளக்கமளிக்கப்பட்டது.
அதுமாத்திரமன்றி தமிழ் மக்கள் கோரும் அரசியல் தீர்வு மற்றும் அதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டதுடன், வடக்கு - கிழக்கு இணைப்பின் முக்கியத்துவம் பற்றியும் தமிழ் அரசுக் கட்சியினரால் அண்ணா மலையிடம் எடுத்துரைக்கப்பட்டது.