மருத்துவக் கழிவுகளை அகற்ற பொறிமுறை தேவை - யாழ்.ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வலியுறுத்து
அரியாலையில் பொதுமக்கள் குடியிருப்புகள் மத்தியில் உள்ள காணியில் மருத்துவக் கழிவுகள் எரியூட்டப்பட்டமை சுகாதாரத்துக்கு தீங்கு விளைவிக்கும்.
எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும். அதைக் கண்காணிக்க பொறிமுறை ஒன்று அவசியம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று(30) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளரிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த பணிப்பாளர், அந்தக் காணி மருத்துவமனைக் காணி என்பதாலேயே அங்கு அவை சேமிக்கப்பட்டிருந்தன.
மக்கள் போராட்டம் நடத்திய மறுநாளே அங்கிருந்த கழிவுகள் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டு தற்காலிகமாக சேமித்து வைக்கப்பட்டுள்ளன.
அவை எரியூட்டிகள் மூலம் எரிக்கப்படுகின்றன என்று தெரிவித்தார்.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சர், இந்த விடயத்தை நியாயப்படுத்தாது கவனமாகக் கையாளவேண்டும்.
மருத்துவமனைக் காணியாக இருந்தாலும் அவதானமாகச் செயற்பட்டிருக்கலாம். இனி இவ்வாறான சம்பவங்கள் நடை பெறாது பார்த்துக்கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்