அரச, புலனாய்வுப் பிரிவின் பேச்சாளர் போன்று என் தொடர்பில் கருத்துரைத்த சுமந்திரனை விசாரணைக்கு உட்படுத்தவும்.--எம்.பி சி.சிறீதரன் கோரிக்கை
அரச பேச்சாளர் அல்லது புலனாய்வுப் பிரிவின் பேச்சாளர் போன்று ஊகத்தின் அடிப்படையில் என் தொடர்பில் கருத்துரைத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் ஓர் சிறப்புரிமை மீறல் தொடர்பில் உரையாற்றும்போதே சிறீதரன் எம்.பி.இதனைக் கோரினார்.
இதன்போது அவர்,
"2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் சென்னையில் தமிழ்நாடு அரசின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்விற்கு உத்தியோகபூர்வமாக அழைக்கப்பட்டேன்.
அதற்காக 10 ஆம் திகதி மாலை 6.45 இற்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து பயணித்த விமானத்தில் பயணிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயணிக்கும் பகுதியூடாக நான் பயணித்த சமயம் விமான நிலைய அதிகாரிகள் பயங்கரவாத தடைப் பிரிவினரின் விசாரணை கோரப்பட்டுள்ளது.
அதனால் உங்கள் கடவுச் சீட்டில் தடை உள்ளது எனத் தெரிவித்து வேண்டுமென்றே தடுத்தனர்.
இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூவ் ஹக்கீம் தலையிட்டு கதைத்ததன் பெயரில் இறுதி நேரத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டேன்.
இருந்தபோதும் 12ஆம் திகதி மாலை நாடு திரும்பியபோது எனது கடவுச்சீட்டில் தடை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
அது என்ன தடை எனக் கோரிய போது எந்தவொரு தடையும் இல்லை எனப் பதிலளித்தனர்.
இதேநேரம் யாழ்ப்பாணத்தில் ஓர் ஊடக நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கு கொண்டிருந்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கனடாவில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்பின் அழைப்பின் பெயரில் சென்றதனால் அந்தத் தடை ஏற்படுத்தப்பட்டு இருக்கலாம் என ஓர் பத்திரிகையில் செய்தி வெளியானது எனத் தெரிவித்திருந்தார்.
எனவே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரை விசாரித்தால் அது எந்தப் பத்திரிகை எனத் தெரியவரும்.
அந்த ஊடகத்தின் முதலாளியை விசாரிக்கும்போது இதன் உண்மைத் தன்மை கண்டறியப்படும்.
இதேநேரம் நாடாளுமன்ற உறுப்பினரின் நண்பரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான அஸ்மின் விமான நிலையத்தில் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தடுக்கப்படவில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக முகநூலில் பதிவு செய்தார்.
தமிழ்நாடு அரசியல் கட்சி ஒன்றின் தலைவரான சீமானுடன் நான் நின்ற புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.
இதேநேரம் கடந்த இரு ஆண்டுகளாக எனது பாதுகாப்புப் பணியில் இருந்த ஒரு பாதுகாப்பு உத்தியோகத்தர் எந்தவொரு முன் அறிவித்தலும் இன்றி நீக்கப்பட்டுள்ளார்.
அது தொடர்பில் நான் பொலிஸ்மா அதிபரிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
எனவே, இவை தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
என்பதோடு அதற்கு அரச பேச்சாளர் அல்லது புலனாய்வுப் பிரிவின் பேச்சாளர் போன்று ஊகத்தின் அடிப்படையில் என் தொடர்பில் கருத்துரைத்த முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்."என்றார்.