இலங்கையில் போர்க் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள படை அதிகாரிகளுக்கு வீசா பெற்றுக்கொள்வதில் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.
இலங்கையில் போர்க் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள படை அதிகாரிகளுக்கு வீசா பெற்றுக்கொள்வதில் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.
குறிப்பாக மேற்குலக நாடுகளுக்கான வீசா பெற்றுக்கொள்வதில் இவ்வாறு நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட படை அதிகாரிகள் இந்த நெருக்கடியை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.
53, 55, 57, 58 மற்றும் 59ம் படையணிகளைச் சேர்ந்த படைத் தளபதிகள் உள்ளிட்ட உயர் படை அதிகாரிகள் வீசா பெற்றுக்கொள்வதில் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.
அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மன் போன்ற நாடுகளுக்கான வீசா விண்ணப்பங்களின் போது அதிகாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் குறித்த அதிகாரிகள் தங்களது சொந்த தேவைகளுக்கேனும் மேற்குலக நாடுகளுக்கான பயணங்களை மேற்கொள்ள முடிவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
போரில் பங்கேற்ற படைவீரர்களுக்கும் இவ்வாறு நெருக்கடி நிலை உருவாகியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
படைவீரர்கள் வீசா பெற்றுக்கொள்ள செல்லும் போது அவர்கள் பணியாற்றிய படைப்பிரிவு, படைத்தளபதியின் பெயர் உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் வழங்க நேரிடுவதாகவும் இவ்வாறான பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் ஓய்வுநிலை லெப்டினன் ஜெனரல் ஜகத் டயஸ் தெரிவித்துள்ளார்.
தங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதனை நிரூபிக்க போதியளவு ஆதாரங்கள் உண்டு என்ற போதிலும் தமக்காக எந்தவொரு அரசாங்கமும் குரல் கொடுக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்கள் தங்களது நிலைப்பாட்டை வெளியிட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
இதேவேளை, உண்மை, சமாதானம் மற்றும் மறுசீரமைப்பு ஆணைக்குழு சட்டத்தினால் படையதிகாரிகள் தண்டிக்கப்படக்கூடிய சாத்தியம் உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.