மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் ஆயுதக்கிடங்கு தோண்டப்பட்டது.

5 months ago


மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாரிய ஆயுதக்கிடங்கு தோண்டப்பட்டு, அதிலிருந்து பெருமளவான ஆயுதங்கள், வெடிபொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன.

கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைக்காடு பகுதியில் நேற்று (10) விசேட அதிரடிப்படையினர் அகழ்வுப் பணியில் ஈடுபட்டபோது 20 ஆயிரம் ரி56 ரக துப்பாக்கி ரவைகள், 300 கண்ணிவெடிகள், 38 வெடி மருந்துப் பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.ஏ.பி.சம்பத் குமாரவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த அகழ்வுப் பணி இடம்பெற்றது.

வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே.ஜி.லக்மல் குமார, கல்லடி, களுவாஞ்சிக்குடி, வவுணதீவு ஆகிய பிரிவுகளின் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இந்த அகழ்வுப்பணியில் ஈடுபட்டனர்.

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கு அமைய இந்த அகழ்வுப் பணி இடம்பெற்றதுடன், எடுக்கப்பட்ட வெடிப்பொருட்களை கரடியனாறு பொலிஸார் பொறுப்பேற்று நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளனர்.