இலங்கைக்கு தென்கிழக்காக உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வட மேற்கு திசை நோக்கி நகர்கிறது வேகம் மந்தம்.- என நா.பிரதீபராஜா தெரிவிப்பு
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது.
நகரும் வேகம் மந்தமாக காணப்படுகின்றது என யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் -
அம்பாறையின் தென்கிழக்காக 238 கி.மீ. தொலைவில் அதன் மையம் காணப்படுகின்றது.
இன்று காலை 8.00 மணியளவில் 40 கி.மீ. தூரத்தில் காணப்படும். இன்று மாலை 3.00 மணியளவில் அம்பாறைக்கு மிக அண்மித்து அம்பாறையில் இருந்து 82 கி.மீ. தூரத்தில் அதன் மையம் காணப்படும்.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 27 ஆம் திகதி அதிகாலை 2.00 மணியளவில் மட்டக்களப்பு நகரில் இருந்து 91 கி.மீ. இல் காணப்படும்.
அதன் பின்னர் நண்பகல் 1.00 மணியளவில் திருகோணமலையில் இருந்து 94 கி.மீ. தூரத்தில் காணப் படும்.
பின்னர் 27ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு முல்லைத்தீவில் இருந்து கிழக்காக 109 கி.மீ.தூரத்தில் கி.மீ. தூரத்தில் இந்த புயல் காணப்படும்.
தற்போதைய நகரும் வேகத்தில் தான் இந்த புயலின் இடவமைவு மேற்குறிப்பிட்ட இடங்களில் காணப்படும்.
நகரும் வேகம் மாற்றமடைந்தால் இடங்களும் மாறும் என்பதைக் கருத்தில் கொள்க.
கரையைக் கடக்கும் இடம் இன்னமும் தெளிவாகவில்லை. தீர்மானமாக அறிந்ததும் தெரிவிக்கப்படும்.
ஆனால் இந்த புயல் நகரும் வேகம் குறைந்தால் எமது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆபத்து நிலை அதிகரிக்கும்.
பொதுவாக ஒரு புயல் கடலில் அதிகம் நிலை கொண்டால் தன்னை வீரியப்படுத்துகின்றது என அர்த்தம்.
தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் கன மழை நேற்று இரவு முதல் இன்னும் அதிகரிக்கும்.
இன்று முதல் வவுனியா மாவட்டத் திற்கும் கன மழை கிடைக்க தொடங்கும்.
இன்று அதிகாலை முதல் குறிப்பாக காலை 7.00 மணி முதல் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மிகக் கன மழை கிடைக்க தொடங்கும்.
பல பகுதிகளுக்கும் வெள்ள அனர்த்த வாய்ப்புண்டு. குளங்களின் கீழுள்ள மக்களுக்கு வெள்ள அனர்த்த எச்சரிக்கையை முன் கூட்டியே வழங்குதல் உசிதமானது.
இன்று நண்பகலுக்குப் பின்னர் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கும் கன மழை கிடைக்கத் தொடங்கும்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் வெள்ள அனர்த்த வாயப்புள்ள மக்கள் இன்று முதல் மிக மிக அவதானமாக இருப்பது அவசியம்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புண்டு.
அம்பாறை மாவட்டத்தில் இன்று இரவு முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும்.
இடி மின்னல் நிகழ்வுகளும் இடம்பெறும் என்பதனால் இடி மின்னல் தொடர்பிலும் மக்கள் அவதானமாக இருப்பது அவசியம்.
அந்த வகையில் நேற்று இரவு மட்டக்களப்பு, திருகோணமலையிலும் இன்று காலை முதல் முல்லைத்தீவிலும் இன்று மாலை முதல் யாழ்ப்பாணத்திலும் பரவலாக இடி மின்னல் நிகழவாய்ப்புள்ளது.
வங்காள விரிகுடாவில் தோன்றியுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மிக பாதிப்பை ஏற்படுத்தும் நாட்களை நாம் நெருங்குகின்றோம்.
இன்றும் நாளையும் நாங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நேற்று மாலை வரையே பல பிரதேசங்களிலும் வெள்ள நீர் தேங்க தொடங்கியுள்ளது.
இன்று முதல் நிலைமை மிக மோசமாக மாறும். எதிர்பார்க்கப்படும் அனர்த்தப் பாதிப்பை விட கூடிய முன்னாயத்தத் தோடு நாம் இருந்தால் எமக்கு ஏற்படும் பாதிப்புக்களை கணிசமாகக் குறைக்க முடியும்.
அரச திணைக்களங்களும், அரச அதிகாரிகளும், உத்தியோகத்தர்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும், தன்னார்வ தொண்டர்களும் உங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த களத்தில் செயற்படுகிறார்கள்.
அவர்களுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கி எங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வோம் - என்றார்.