தலைவருக்கும் எனக்கும் சிறிய பிரச்சினையே கருணா ஆதங்கம்

6 months ago

 "தலைவருக்கும் கருணா அம்மானுக்கும் இடையே நடந்தது ஒரு சிறிய பிரச்சினை - பேச்சின் அடிப்படையில் ஏற்பட்ட பிரச்னை. அதனை சிலர் பூதாகரமாக்கி வரு கின்றனர்”,- இவ்வாறு கருணா என்று அறியப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய சுதந்திர முன்னணி தலைவரான அவர் நேற்று மட்டக்களப்பு கல்லடியில் உள்ள கட்சியின் தலைமை பணி மனையில் முன்னாள் 

போராளிகளுக்கான உதவித் திட் டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,

"தலைவருக்கும் கருணா அம்மானுக் கும் இடையில் ஏற்பட்டது ஒரு சிறிய பிரச்சினை. பேச்சின் அடிப்படையில் ஏற்பட்ட பிரச்சினை. அதனை சிலர் பூதாகரமாக்கி வருகின்றனர்.

“தலைவரின் இழப்பு என்பதை இன்று நாங்கள் நினைத்துப் பார்க்கும் போதும் ஒரு வேதனையான விடயமாக இருக்கின்றது. அவரின் உடலை நான் சென்றே அடையாளப்படுத்தினேன். அது பெரும் வேதனையான விடயம்.

இன்று எத்தனையோ பேர் முதலைக் கண்ணீர் வடித்துக்கொண்டு தலைவரின் பெயரை விற்று வெளிநாடுகளில் நிதிகளையும் வசூலித்துக்கொண்டு வாழ்கின் றார்கள்.

"நான் தலைவருடன் 22 வருடங்கள் பயணித்தவன். இன்றும் எனது அடிமனதில் அவரின் எண்ணங்களும் நினைவுகளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இன்று கருணா அம்மான் என்ற பெயர் வருவதற்கு காரணமே தலைவர் பிரபாகரன் தான்.

அதனை நான் மறக்கமாட்டேன். அதனை மனதில் கொண்டு எமது போராளிகளை சிறந்தமுறையில் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.

இன்று முக்கியமான ஒரு தினம். தமிழ் பெருந்தலைவர் இரா. சம்பந்த னின் பூதவுடல் இன்று திருகோண மலையில் தகனம் செய்யப்படுகின்றது. அவரை மறக்கமுடியாது.

நான் தலைவருடன் இந்தியாவிலிருந்தபோது அடிக்கடி சம்பந்தன் ஐயாவையும், மாவை ஐயாவையும் சந்தித்துப் பேசுவோம். தள்ளாடும் வயதிலும் தமிழர்களின் உரிமைக்காக குரல்கொடுத்து வந்த ஒரு மாமனிதர். அவருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை எமது கட்சி சார்பாக தெரிவித்துக் கொள்கின்றேன். அவரின் இழப்பை பெரும் இழப்பாகவே பார்க்கின்றேன்.

இன்று தமிழ் தேசிய கூட்டமைப் புக்குள் பதவிக்காக போட்டி நடைபெறுகின்றது. பதவிக்காக சுமந்திரனும் சிறீதரனும் வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர். அந்தக் கட்சியானது இதுவரை காலமும் சம்பந்தன் என்ற ஒரு தூணில் தான் நின்றது. இன்று அந்த தூணும் சாய்ந்துவிட்டது. அவர்கள் சிதறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன”, என்றார்.


()